நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது .


விஜய் ஆண்டனியின் படவரிசை


நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' படத்தின் அப்டேட் சமீபத்தில் தான் வெளிவந்தது. நடிகை மிருணாளினி ரவி இப்படத்தின் ஹீரோயினாக நடிக்கும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இயக்குநர் சி. எஸ். அமுதன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் 2022ஆம் ஆண்டு முதல் உருவாகி வரும் ரத்தம் படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகியது.


ரத்தம்


தமிழ் படம் 1 & 2 படங்களை இயக்கி ஏற்கெனவே தமிழ் சினிமாவில் கவனமீர்த்துள்ள சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள திரைப்படம் ரத்தம். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க மஹிமா நம்பியார்,  நந்திதா ஸ்வேதா,  ரம்யா நம்பீசன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்  நடித்துள்ளார்கள். சமீபத்தில் வித்தியாசமான படத்தின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.






வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரத்தம் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.


 எப்போ ரிலீஸ்






ரத்தம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. வருகின்ற அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி ரத்தம் திரைப்படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவலுடன் படத்தின் போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில்  ‘சாத்தியமில்லாத எல்லாத்தையும் நீக்கிட்டா மிஞ்சிறது நம்ப முடியாத ஒன்னா இருந்தாலும் அதான் உண்மை “ என்கிற குழப்பமான வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


அடுத்தடுத்த ரிலீஸ்


முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அதற்கு முன்னதாக வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டை நடத்தியது.


இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் மிருணாளினி ரவியுடன் ரோமியோ படத்தில் இணைந்துள்ளார் விஜய் ஆண்டனி.


பரத் தனசேகர் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில், இளவரசு, தலைவாசல் விஜய். விடிவி கணேஷ், உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கும் நிலையில், அடுத்த ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.