இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நாக்கு முக்கா போன்ற பல துள்ளலான பாடல்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). அதை தொடர்ந்து 'நான்' படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்த இப்படம் விஜய் ஆண்டனிக்கு நல்ல பாராட்டுகளை பெற்று கொடுத்தது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த பிச்சைக்காரன், சலீம், சைத்தான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் எடிட்டராகவும் தனது பன்முகத்திறமையை வெளிப்படுத்தினார். 


 



சமீபத்தில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ரோமியோ'. யூடியூப் மூலம் திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலமானவர் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். 'ரோமியோ' படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் சொன்ன விமர்சனம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 


இதுகுறித்து விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “நல்ல படங்களைத் தவறாக விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் சொல்வதை நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை புறக்கணிக்காதீர்கள். தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ரோமியோவை அன்பே சிவம் படம் போல ஆகிடாதீங்க” எனத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். 


 


 




அந்த வகையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு விஜய் ஆண்டனி பதில் அளித்து இருந்தார். அப்போது “உங்களுக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் பர்சனலாக ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? அன்பே சிவம் மாதிரி ரோமியோ படத்தை ஆகிடாதீங்க அப்படினு அறிக்கை எல்லாம் கொடுத்து இருந்தீங்க?” என கேட்கப்பட்டது. அதற்கு விஜய் ஆண்டனி பதிலளிக்கையில் "அதெல்லாம் எதுவுமே இல்லை. அவர் வேலையை அவர் செய்றாரு. என்னோட வேலையை நான் செய்கிறேன். அவர் நல்ல விதமா பேசினா அவரோட யூடியூப் வீடியோவை நீங்க பாப்பீங்களா? அவர் இது மாதிரி ஏதாவது பேசினா தானே வியூஸ் வரும்" என்றார் விஜய் ஆண்டனி. 


இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, வி டிவி காமேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.