விஜய் ஆண்டனி
நடிகராக சூப்பர் பிஸியாக இருந்து வருபவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தற்போது அவர் நடித்திருக்கும் படம் ரத்தம். தமிழ் படம் 1 மற்றும் 2 ஆம் பாகத்தை இயக்கிய சி.எஸ் அமுதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடிக்க மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா , ரம்யா நம்பீசன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். கண்ணன் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது.
படம் ரிலீஸ் ஒத்திவைப்பு
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் உருவாகி வரும் ரத்தம் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 6 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் விஜய் ஆண்டனி. அந்த போஸ்டரில் ‘சாத்தியமில்லாத எல்லாத்தையும் நீக்கிட்டா மிஞ்சிறது நம்ப முடியாத ஒன்னா இருந்தாலும் அதான் உண்மை “ என்கிற குழப்பமான வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஒரு நாள்
இந்நிலையில் ரத்தம் படத்தின் முதல் பாடல் குறித்தான அப்டேட் வெளியிட்டுள்ளது படக்குழு. ஒரு நாள் என்கிற இந்தப் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. பாடகர் அறிவு இந்தப் பாடலை எழுதி பாடியுள்ளார் .
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள்
விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' படத்தின் அப்டேட் சமீபத்தில் தான் வெளிவந்தது. நடிகை மிருணாளினி ரவி இப்படத்தின் ஹீரோயினாக நடிக்கும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். பரத் தனசேகரன் படத்திற்கு இசையமைக்க இளவரசு, வி.டி.வி கனேஷ் , தலைவாசன் விஜய் உள்ளிட்டவர்கள் படத்தில் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.