Vijay Antony: ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் தற்போது மிகவும் வருத்தத்துடன் பேசிவரும் விஷயம் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகளின் மரணம் தொடர்பாகத்தான். இதற்காக ஒட்டுமொத்த திரையுலகும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறிவரும் நிலையில், இணையத்தில் விஜய் ஆண்டனியின் பேச்சுகள் மற்றும் பேட்டிகளை இணையவாசிகள் அதிகப்படியாக பகிர்ந்து வருகின்றனர்.
அதில், ஓராண்டுக்கு முன்னர் அவர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், மேற்கத்திய கலாச்சாரத்தைப் போல் இந்தியக் கலாச்சாரம் இல்லை. இதனாலே இங்கு குடும்ப அமைப்புகள் இந்தியாவில் சிக்கலான அமைப்பாக உள்ளது. மேலை நாடுகளில் குடும்பத்தினர் சந்திக்கும்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு சந்திக்கின்றனர். ஆனால் நமது நாட்டில் அம்மா அப்பா என்றால் காலில் விழுந்து வணங்கவேண்டும் எனக் கூறி அவர்களை நம்மிடம் இருந்து விலக்கி வைத்துவிட்டனர். இந்த தலைமுறையில் இது ஓரளவுக்கு மாறிவருகிறது என நினைக்கிறேன். இது முற்றிலும் மாற வேண்டும். குடும்ப அமைப்புகளில் உறவுகளுக்கு இடையில் இடைவெளியே இருக்கக்கூடாது.
நமது நாட்டில் பெற்றோர்கள் குழந்தைகளைப் பார்க்கும்போது என்ன படிக்கிற, எப்படி படிக்கிற என்பது போன்ற கேள்விகளைத்தான் அதிகம் கேட்டுக்கொண்டு உள்ளனர். பெற்றோர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் படிப்பு என்பது ஏற்கனவே ஒருவர் எழுதி வைத்ததை மீண்டும் படிப்பது மட்டும்தான். படிப்பு வேறு அறிவு வேறு என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
எனது வீட்டில் எனது இரண்டாவது மகள் இருக்கிறார். அவர் டீச்சரிடம் படித்துக்கொண்டு இருக்கும்போது, என்னிடம் போதும் எனக் கூறினால், நான் உடனே டீச்சரிடம், டீச்சர் போதும், அவங்க போதும்னு சொல்றாங்க எனக் கூறிவிடுவேன். எனது வீட்டில் குழந்தைகள் படிக்க விரும்புகிறார்களா படிக்கட்டும், வேண்டாம் என நினைக்கிறார்கள் என்றால் வேண்டாம் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். வாழ்க்கையை வாழ். உனக்கு தோனுவதைச் செய் என்பதுதான் எனது தத்துவம். பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளிடம் படிப்பு தொடர்பாகவே கேள்வி எழுப்புவதால், அந்த இடத்தில் தோழமை உணர்வு தடைபட்டுப்போகிறது.
அதேபோல் வேலைக்குச் செல்பவர்கள் அதிகப்படியான நேரத்தை வேலையிலேயே செலவிடுவதால், அவர்களின் குழந்தைகள் நன்கு வளர்ந்த பின்னர் தோளில் கைபோட்டு பேசினால் குழந்தைகள் அதனை உடனே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் தோழமை உறவு ஏற்படவேண்டுமானால், படிப்பு குறித்து பள்ளியில் பேசுங்கள். படிக்கவில்லை என்றால் உங்கள் குழந்தை முட்டாள் என நினைத்துகொள்ளக் கூடாது. குழந்தைகள் பள்ளியில் படித்தால் போதும், அதைவிடுத்து ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி டியூசன் என்பது குழந்தைகளை நெருக்கடிக்கு ஆளாக்கும் செயல். இதுபோன்று பெற்றோர்கள் செய்யக்கூடாது.
குடும்ப உறவுகளுக்குள் இடைவெளி வருவதற்கு மற்றொரு காரணம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்போதும் கண்டிப்புடன் இருப்பதும் ஒன்றுதான். இதனால், பெற்றோர்களுக்கு ஏதேனும் ஒருநாள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசலாம் என நினைக்கும்போது ஏதோ ஒன்று நம்மைத் தடுத்துவிடுகின்றது. நமது கலாச்சாரம் நமக்கு கற்பித்த கடிவாளங்களில் நாம் சிக்கிக்கொண்டது மட்டும் இல்லாமல் நமது குழந்தைகளையும் சிக்கவைப்பது நமது முட்டாள்தனம்” இவ்வாறு அந்த வீடியோவில் விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.