ரொமாண்டிக் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின்அப்டேட் வெளியாகி கவனமீர்த்துள்ளது. பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், அடுத்ததாக தான் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து விஜய் ஆண்டனி அப்டேட் கொடுத்துள்ளார். அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி இணையும் இப்படத்தில் நாயகியாக மிருணாளினி ரவி நடிக்க உள்ளார்.
இசையமைப்பாளர் பரத் தனசேகர் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில், இளவரசு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.
ஆக்ஷன், செண்டிமெண்ட், சஸ்பென்ஸ் என தொடர்ந்து சீரியஸான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வந்த நிலையில், இவற்றில் இருந்து மாறுபட்டு காதல் ததும்பும் ரொமாண்டிக் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய இந்த புது முயற்சி பற்றி தன் சமூக வலைதளப் பக்கத்தில்க் பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி, “என்னை ரொமான்டிக் ஹீரோவா பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது” என ஜாலியாகப் பதிவிட்டுள்ளார்.
வரும் 2024ஆம் ஆண்டு இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் விஜய் ஆண்டனியை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், விஜய் ஆண்டனியின் பதிவில் அவரிடம் பிச்சைக்காரன் 3 படத்தை விரைவில் இயக்கும்படி ரசிகர்கள் கோரி வருகின்றனர்.
பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ் ரசிகர்களைக் காட்டிலும் தெலுங்கு ரசிகர்களை ஈர்த்து டோலிவுட்டில் மாஸ் ஹிட் அடித்துள்ள நிலையில், தெலுங்கிலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரோமியோ திரைப்படமும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.
நேற்று முன் தினம் நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் ஹீரோவாக 11 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி, நான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இசையமைப்பாளராக கலக்கிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி நான் எனும் படத்தின் மூலம் 2012ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார்.
விஜய் ஆண்டனியின் புது முயற்சியுடன் சேர்த்து கதைக்களம் காரணமாக இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்த நிலையில் தொடர்ந்து நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தி, சலீன், பிச்சைக்காரன் ஆகிய படங்களின் மூலம் தொடர்ந்து கவனமீர்த்தார்.
கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனியின் இசையமைப்பாளராகவே பலரையும் இன்னும் ஆக்கிரமித்துள்ளார். இந்நிலையில், நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் விஜய் ஆண்டனி தொடர்ந்து இசையமைக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அவரிடம் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.