இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னணி பாடகர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமையாளராக கோலிவுட்டில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி.
மலேசியாவில் லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், ஜனவரி 17ஆம் தேதி விஜய் ஆண்டனிக்கு விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியானது.
இவரது நடிப்பில் அருள் செல்வகுமாரின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் ஹிட்டான நிலையில், பிச்சைக்காரன் 2 படத்துக்கான பணிகள் முன்னதாகத் தொடங்கி நடைபெற்று வந்தன.
விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகும் நிலையில் காவ்யா தாப்பர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகினர்.
அதனைத் தொடர்ந்து, பிச்சைக்காரன் 2 படத்தில் படப்பிடிப்பு மலேசியாவின் லங்காவி தீவில் முன்னதாக நடைபெற்று வந்த நிலையில், ஷூட்டிங்கின்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கியதாகவும், ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
படகில் இருந்தபடி ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியபோது நிகழ்ந்த விபத்தில் அவர் சுயநினைவிழந்து தண்ணீரில் மூழ்கியதாகவும் பின் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில், முன்னதாக விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
’பிச்சைக்காரன் - 2’ படப்பிடிப்பில் விபத்தில் காயமடைந்த விஜய் ஆண்டனி 2 நாள்களுக்கு முன்பே தனது சென்னை வீட்டுக்கு வந்துவிட்டார்.
இரண்டு வாரங்கள் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கச் சொல்லி இருக்காங்க. வீடியோ மூலம் பேசுவார். ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம், அவர் பற்றி தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என இயக்குநர் சுசீந்திரன் பகிர்ந்துள்ளார்.
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வரும் மற்றொரு படமான ’வள்ளி மயில்’ திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.