ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தனியார் யூடியூப் சேனல் மீது வழக்கு தொடர இருப்பதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
பாஜக, விஜய் ஆண்டனி மீது புகார்
தனியார் யூடியூப் சேனல் ஒன்றில், ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சியில் நிகழ்ந்த குளறுபடிகள் குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், விஜய் ஆண்டனி பாஜகவுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக இந்நிகழ்ச்சியில் குளறுபடிகள் நடத்த சதி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வீடியோவில், “பாஜக யாத்திரைக்காக டைட்டில் பாடலை விஜய் ஆண்டனி கம்போஸ் செய்து கொடுக்கவிருந்தார். ஆனால் முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை தான் அதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது குழு அணுகியது. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்துகொள்ள மாட்டேன் எனக்கூறி அவர்களை திருப்பி அனுப்பி விட்டார். அதனைத் தொடர்ந்து தீனா - கங்கை அமரன் இணைந்து அப்பாடலை கம்போஸ் செய்தனர்.
இந்நிலையில், பாஜக யாத்திரைக்கான பாடலை இசையமைத்து தராததால் கோபமுற்ற அண்ணாமலை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குறி வைத்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்கெனவே மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நாளில் நிகழ்ச்சியில் குளறுபடிகளை நிகழ்த்த பேரங்கள் நடைபெற்றன. ஏசிடிசி நிறுவனத்தினை சேர்ந்த பவித்ரன் ஷெட்டி என்பவர் அண்ணாமலை உடன் சேர்ந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டார்.
ஏ.ஆர்ரஹ்மானுக்கு இந்நிகழ்ச்சியில் கரும்புள்ளி குத்த சதி செய்யப்பட்டது. அப்படி செய்தால் அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மான் தேர்தல் சமயத்தில் வேறு வழியில்லாமல் பாஜகவை அணுகுவார். தேர்தல் பாடலை அவரை வைத்து கம்போஸ் செய்யலாம் என அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் பாஜகவினருக்கு நெருக்கமாக வலம் வரும் விஜய் ஆண்டனி இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட பொறாமை காரணமாக இந்த சதிவேலைக்கு துணை போயுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் யூடியூப் சேனலின் இந்த வீடியோ இணையத்தில் இன்று காலை முதல் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.
‘மான நஷ்ட வழக்கு தொடருவேன்’
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியால் தான் வேதனை அடைத்துள்ளதாகவும், விரைவில் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் விஜய் ஆண்டனி தற்போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் சிறு மன வேதனையுடன் இந்தக் கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி யூடியூப் சேனல் ஒன்றில் என்னைப் பற்றியும் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களையும் தொடர்புபடுத்தி பொய்யான வதந்தி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அது முற்றிலும் பொய். அந்த யூட்யூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்.
மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும் நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இந்தத் தகவல் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.