ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘சர்வைவர் ’ நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி தற்போது போட்டி, சச்சரவு, எலிமினேஷன் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ராந்தும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். விக்ராந்த் அவ்வப்போது நிகழ்ச்சியில் நடிகர் விஜயை பற்றி பேசுவதுண்டு. இந்த நிலையில் தற்போது அவர் விஜயை பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “1991 முதல் 1995 வரையிலான காலக்கட்டமானது எனது குடும்பத்திற்கு மிகவும் கடினமான காலமாக இருந்தது. தந்தை படத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு படத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இழந்த நஷ்டத்தை ஈடுக்கட்ட இன்னொரு படத்தை சொத்துக்களை அடமானம் வைத்து தயாரித்தோம். ஆனால், அந்தப் படத்தின் சிடி வெளியே வந்து விட்டது.
அப்போது தொடர்ப்பட்ட வழக்கு தற்போது வரை நிலுவையில் இருக்கிறது. அப்போது வீடு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டோம். வீட்டு உரிமையாளர் வந்து எங்கள் வீட்டின் முன்பு வந்து நின்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவார். அந்த சமயத்தில்தான் என்னுடைய அண்ணா விஜய் எங்களுக்கென்று சொந்தமாக வீடு ஒன்றை வாங்கிக்கொடுத்தார். அதன் பிறகு எங்களின் வாழ்கை சரியாக ஆரம்பித்தது. நிறைய நல்ல விஷயங்கள் எங்களது குடும்பத்திற்கு நடக்க ஆரம்பித்தது. விஜய் எங்கள் அண்ணன் தான். ஆனால், இந்தக் காலத்தில் அப்படி யாரும் உதவி செய்வதில்லை. அவருக்கு இந்த சமயத்தில் என்னுடைய மிகப் பெரிய நன்றி. முன்னதாக விஜய் வளர்ந்து வரும் நேரத்தில் அவர் சந்தித்த அவமானங்கள், பட்ட கஷ்டங்கள், அனைத்தையும் அவர் எப்படி வென்றார் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விக்ராந்த் நிகழ்ச்சியில் பகிர்ந்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலத்திற்கு அறிமுகமான விக்ராந்த் சட்டப்படி குற்றம், தாக்க தாக்க, கெத்து, கவண் உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார். விஜய் தாயாரின் தங்கை மகன் விக்ராந்த் என்பது குறிப்பிடத்தக்கது.