விஜயின் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதே நாளில் சூர்யா நடித்துள்ள கருப்பு படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் தற்போது விஜய் சூர்யா இணைந்து நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படமும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
ஃப்ரண்ட்ஸ் திரைப்பட ரீரிலீஸ்
மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் விஜய் சூர்யா இணைந்து நடித்து சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற திரைப்பட ஃப்ரண்ட்ஸ். வடிவேலு , தேவயானி , ராதாரவி , மதன்பாப் , ரமேஷ் கண்ணா சார்லீ உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 24 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை மக்களால் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. வடிவேலுவின் சலிக்காத காமெடி காட்சிகள் , இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் , சூர்யா விஜய் நட்பு என நட்பைப் பற்றிய ஒரு கிளாசிக் படமாக தமிழ் சினிமாவில் நிலைத்துள்ளது இப்படம். தற்போது வரும் நவம்பர் 21 ஆம் தேதி ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அண்மையில் விஜய் நடித்த குஷி திரைப்படம் ரீரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத் தக்கது.