தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். 1974ம் ஆண்டு ஜூன் 22-ந் தேதி சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த இவருக்கு நாளை 49வது பிறந்தநாள் ஆகும். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், சமீபகாலமாக அரசியல் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ள விஜய்யின் நடவடிக்கைகள் அவரது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.


இதயங்களை வென்ற விஜய்:


கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்டுள்ள நடிகர் விஜய் இந்த இடத்தை அடைவதற்கு கடந்து வந்த பாதைகளும் கடினமான ஒன்றே ஆகும். பிரபலங்களின் வாரிசுகளாக இருந்தால் அவர்களது பெற்றோர்கள் கோலோச்சிய துறையில் எளிதில் நுழைந்துவிட முடியும். ஆனால், தங்களது பெற்றோர்களை விட பிரபலமாக முடியுமா? என்பது கேள்விக்குறியே.


நடிகர் விஜய் மிக எளிதாக திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார். அதனால்தான் அவர் இந்த இடத்திற்கு சென்றுவிட்டார் என்று  அவரது வெறுப்பாளர்கள் சிலர் கூறுவது உண்டு. இந்த விமர்சனங்களுக்கு நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பதிலும், கல்வி விருது வழங்கும் விழாவில் கூறிய கருத்துமேதான் அந்த வெறுப்பாளர்களுக்கு பதிலடி.


விஜய்யின் லட்சியம்:


பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் வாரிசாக இருந்தாலும் சிறு வயது முதலே தான் ஒரு நடிகனாக வேண்டும் என்பதில் நடிகர் விஜய் மிக தெளிவாக கூறியிருந்தார். அதை நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டியிலும் மிக தௌிவாக கூறியிருப்பார். அதேபோல, கல்வி விருது வழங்கும் விழாவிலும் மாணவர்கள் மத்தியில் பேசியபோது தன் சிறுவயது முதலே சினிமாதான் எனது கனவு. நடிகராவதே எனது லட்சியம். அதை நோக்கியே எனது பயணம் என்று பேசியிருந்தார்.


விஜய்யின் வெற்றிக்கு அவரது நடிப்பு, நடனம், ரசிகர்களை வசீகரிக்கும் அவரது தோற்றம் என பலவற்றை காட்டிலும் சிறு வயது முதலே தான் ஒரு நடிகராக வேண்டும் என்ற அவரது லட்சியத்தில் அவருக்கு இருந்த தெளிவும், அதை நோக்கிய அவரது உழைப்புமே முதன்மை காரணம் ஆகும். ஏனென்றால், சிறு வயதில் தந்தையிடம் நடித்து காட்டிய விஜயை திரையில் நாயகனாக்க வேண்டும் என்று எஸ்.ஏ.சி. எடுத்த முடிவிற்கு விஜய்யிடம் இருந்த தன்னம்பிக்கையே அச்சாரம் ஆகும்.


ஏறுமுகம்:


1984ம் ஆண்டே வெற்றி என்ற படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். அடுத்த படத்தில் விஜயகாந்திற்கு தம்பியாக நடித்து செந்தூர பாண்டி மூலம் மக்கள் மத்தியில் சென்றடைந்தார். தொடக்கத்தில் கவர்ச்சி பாடல்கள், காதல் கதைகள் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிப்படங்களை அளிக்காவிட்டாலும் பூவே உனக்காக படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையையும், குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாற்றியது.


காதல் நாயகனாக காதலுக்கு மரியாதை, பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், மின்சார கண்ணா, பிரியமானவளே, குஷி, ப்ரண்ட்ஸ் படங்கள் மூலமாக மாபெரும் வெற்றியை பெற்ற விஜய் திருமலைக்கு பிறகு ஆக்‌ஷன் நாயகனாக அசத்த தொடங்கினார். கில்லி படம் நடிகர் விஜய்யின் புகழை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்ததுடன், விஜய்யின் ரசிகர்கள் பட்டாளத்தை பல மடங்கு உயர்த்தியது.


விடாப்பிடியும், விடாமுயற்சியும்:


கில்லிக்கு பிறகு விஜய்யின் வளர்ச்சி மிரட்டலாக இருந்தது. திருப்பாச்சி, சிவகாசி படங்கள் விஜய்க்கு கிராமங்கள் தோறும் தங்கள் வீட்டு பிள்ளையாக மாற்ற, போக்கிரி படம் இளைஞர்கள் மத்தியில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. போக்கிரிக்கு பிறகு தொடர்ந்து தோல்வி படங்கள் அளித்தாலும் காவலன் மூலம் கம்பேக் கொடுத்த விஜய் நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், மாஸ்டர் என்று மிரட்டினார்.


சாதாரண குழந்தை நட்சத்திரமாக தொடங்கி இன்று லியோவாக வளர்ந்து நிற்கும் விஜய்யின் வெற்றிக்கு காரணம் தான் ஒரு நடிகனாக வேண்டும் என்பதில் இருந்த தெளிவும், நடிகனாக வேண்டும் என்பதில் இருந்த விடாப்பிடி, நடிகனாக வெற்றி பெற வேண்டும் என்பதில் இருந்த விடா முயற்சியே ஆகும்.