விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விடுதலை:
கோலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவரும் தேசிய விருது வென்றவருமான வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை’ படம் வரும் மார்ச் 31ஆம் தேதி வெளியாகிறது. சூரியும் விஜய் சேதுபதியும் முக்கியக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட பலர் இவர்களுடன் இணைந்து நடித்துள்ளனர்.
சூரி போலீஸ் கதாபாத்திரத்திலும், போராளியாக விஜய் சேதுபதியும் படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாகிறது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்துள்ள நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அசரவைக்கும் மேக்கிங் வீடியோ:
நடிகர் சூரி துப்பாக்கியுடன் குதித்தோடும் ஆக்ஷன் காட்சிகள், காடு, மலைப் பாதைகளில் படக்குழுவினர் பணியாற்றும் காட்சிகள், நடிகர்கள் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் உள்ள காட்சிகள் இந்த மேக்கிங் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இயக்குநர் வெற்றிமாறன் ஒருவொரு காட்சியையும் நடித்துக் காண்பித்து வேலை வாங்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு லைக்ஸ் அள்ளி வருகிறது.
துணைவன் சிறுகதை:
அசுரன் பட வெற்றிக்குப் பிறகு ஏற்கெனவே நடிகர் சூரியை வைத்து இரண்டு முறை திரைப்படம் எடுக்க முயன்று நடிகர் வெற்றிமாறன் கைவிட்ட நிலையில், இறுதியாக எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையப்படுத்தி விடுதலை படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.
அதேபோல் முன்னதாக தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவை தான் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வெற்றிமாறன் கேட்டிருந்தார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியைக் காட்டிலும் சூரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நிகழ்ந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தன் கதாபாத்திரம் குறித்து பெரிதும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
விடுதலை முதல் பாகத்தின் நீளம் 2.30 மணி நேரங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்துக்கு ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவன சார்பில் எல்ரெட் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ள நிலையில்,ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது.