வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்துக்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் நீளம் 2.30 மணி நேரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் வெற்றி மாறன், விஜய் சேதுபதி, சூரி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சூரியின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் மிகவும் வித்தியாசமானதாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், சூரிக்காகவே படத்தைப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் 'விடுதலை'.


நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார்.






இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.


அந்த வகையில் மிகவும் எதிர்பார்த்த விடுதலை படத்தின் டிரைலர் மார்ச் 8 அன்று வெளியானது. நெஞ்சை உலுக்கும் ஒரு பரபரப்பான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் விடுதலை திரைப்படத்தின் டிரைலர் சஸ்பென்ஸுடன் விஜய் சேதுபதி பேசும் டயலாக் ஹைலைட்டாக அமைந்துள்ளது.


"மனுஷன் பொறக்குற அப்பவே ஒருத்தன் மேல, ஒருத்தன் கீழ, ஒருத்தன் சைடுல என பிரிக்குற நீங்க பிரிவினைவாதிகளா... இல்ல சமுதாயத்துல எல்லாருமே ஒண்ணுனு போராடுற நாங்க பிரிவினைவாதிகளா..."  என விஜய் சேதுபதி பேசும் வசனம் கவனமீர்த்துள்ளது. நடிகர் சூரிக்கு கொடுக்கப்பட்டுள்ள வெயிட்டான கதாபாத்திரத்தை மிகவும் அழகாக தோளில் சுமந்துள்ளார். டிரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. 



மார்ச் 31ல் வெளியீடு:


இந்நிலையில் வரும் மார்ச் 31ஆம் தேதி விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னதாக ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


முன்னதாக இசை வெளியீட்டு விழா மேடையில் தன்னை முதன்முறையாக கதாநாயகனாக்கிய இயக்குநர் வெற்றிமாறனுக்கு சூரி நன்றி தெரிவித்தார். மேலும் படம் பார்த்து விட்டு தனக்கு நடிகர் விஜய் சேதுபதி ஃபோனிலேயே முத்த மழை பொழிந்தார் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.