'விடுதலை 2' (Viduthalai Part 2) படத்தில் நடிகர் சேத்தன் உக்கிரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், அவரை படம் வந்தபிறகு வெளியேவிட வேண்டாம் என்றும் சூரி சேத்தனின் குடும்பத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


விடுதலை பாகம் 2


வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், பாலாஜி சக்திவேல், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை’. இப்படத்தின் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி இயக்குநர் வெற்றிமாறனுக்கு மற்றுமொரு வெற்றிப்படமாக அமைந்ததுடன், பாராட்டுக்களையும் குவித்தது.


படத்தின் கதை ஜெயமோகனின் துணைவன் நாவலைத் தழுவியது என படக்குழு குறிப்பிட்டு இருந்தாலும், பல்வேறு உண்மை சம்பவங்களை இக்கதை தழுவியது, வெற்றிமாறன் உண்மை சம்பவங்களைக் குறிப்பிடாமல் படத்தை எடுத்துள்ளார் என பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், இவற்றையெல்லாம் தாண்டி படம் பேசுபொருளாகி ஹிட் அடித்தது.


நடிகர் சேத்தனை புகழ்ந்த சூரி




மேலும் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு 5 நிமிடங்கள் தொடர் கரவொலி பெற்று சர்வதேச சினிமா ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்துள்ளது. இதனால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.


இந்நிலையில், முன்னதாக தனியார் தொலைக்காட்சியின் நிகழ்வில் விடுதலை படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அப்போது இந்த விழாவில் சூரி படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது படத்தில் மோசமான காவல் துறை உயரதிகாரியாக நடித்துள்ள சேத்தன் பற்றி சூரி பகிர்ந்துகொண்டார்.


‘படம் பார்க்க வராதீங்க, கொன்னுடுவாங்க’


“நடிகர் சேத்தன் அண்ணன். சண்டாள சேத்தன் என்று தான் நான் அவரை சொல்வேன். 2ஆம் பாகம் வரும்போது படம் பார்க்கும் ஆர்வத்தில் தியேட்டருக்குலாம் வந்துடாதீங்க. உங்கள கொன்றே விடுவார்கள். தேவதர்ஷினி மேடம் வரட்டும். உங்கள் மகள் வரட்டும். 4 நாள்கள் இவரை வீட்டிலேயே உட்கார வச்சிடுங்க. பிரிச்சிடுவாங்க அண்ணே. அப்படி நடிச்சிருக்காரு. முதல் பார்ட்டிலேயே ஸ்கோர் செய்திருப்பார்.


இரண்டாவது பாகத்தில் வீட்டுக்கு வரும் வரை அழுகை. 20 நிமிஷங்கள் நம்மள அது வெளியவே விடாது. உங்கள மாதிரி ஆடியன்ஸ் பார்த்து ரிசல்ட் தந்த பிறகு தான் இப்படி பேசறேன். ஆணவத்தில் பேசவில்லை. அப்படி ஒரு பிரதமான நடிப்பை சேத்தன் கொடுத்துள்ளார். அத்தனை மனசிலும் நீங்கள் நின்று கொண்டிருப்பீர்கள் அண்ணே” என சேத்தனை சூரி புகழ்ந்து தள்ளியுள்ளார். 


டிவி டூ வெள்ளித்திரை


பிரபல சின்னத்திரை நடிகராக விளங்கி வெள்ளித்திரைக்கு பயணித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சேத்தன், தன் மெட்டி ஒலி மாணிக்கம் கதாபாத்திரத்துக்குப் பிறகு விடுதலை படத்தில் மோசமான நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று ரசிகர்களின் வசவுகளைப் பெற்றார். அந்த வகையில் விடுதலை இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரின் வரிசையில், சேத்தன் மிரட்டலான நடிப்பை வழங்கி இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.