'விடுதலை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகும் படம் ‘விடுதலை’. விஜய் சேதுபதி, சூரி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாக உள்ளது.
இளையராஜாவுடன் முதன்முறை கூட்டணி
வெற்றிமாறன் இந்தப் படத்தின் முதன்முறையாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்துள்ளார். போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூரியும், போராளியாக நடிகர் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்தது.
எனினும் படத்தின் வெளியீட்டுத்தேதி குறித்து அறிவிக்கப்படாமலேயே இருந்த நிலையில் படம் இந்த மாதத்துக்குள் வெளியாகும் என் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று இந்தப் படத்தின் வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் வெளியீடு
அதன்படி, வரும் மார்ச் 31ஆம் தேதி விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னதாக ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முன்னதாக விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 9ஆம் தேதி நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
விடுதலை பட ட்ரெய்லரும் அன்றைய தினம் வெளியான நிலையில், நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விழாவில் பேசினர்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழா மேடையில் தன்னை முதன்முறையாக கதாநாயகனாக்கிய இயக்குநர் வெற்றிமாறனுக்கு சூரி நன்றி தெரிவித்தார். மேலும் படம் பார்த்து விட்டு தனக்கு நடிகர் விஜய் சேதுபதி ஃபோனிலேயே முத்த மழை பொழிந்தார் என்றும் தெரிவித்தார்.
நினைவுகூர்ந்த விஜய் சேதுபதி
அதேபோல் தான் வடசென்னை பட வாய்ப்பைத் தவறவிட்டது குறித்து நடிகர் விஜய் சேதுபதி இந்த விழாவில் நினைவுகூர்ந்திருந்தார்.
தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், விடுதலை படம் தொடங்கியதற்கு இளையராஜா தான் காரணம் என்றும், இளையராஜாவை பாலுமகேந்திராவிடம் பணியாற்றியபோது தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தற்போது தான் அருகிலிருந்து அவரைப் பார்த்து ரசித்து பணிபுரிந்திருப்பதாகவும் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.