ஜூராசிக் பார்க் படத்தின் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற ஹாலிவுட் நடிகர் சாம் நீல் ரத்தப் புற்றுநோயால் அவதியுற்று வருவது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


90ஸ் கிட்ஸின் ஆதர்ச நடிகர்




ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் இன்றளவும் கொண்டாடி மகிழப்படும் மாஸ்டர்பீஸ் படம் ஜூராசிக் பார்க் (Jurassic Park).


இந்தப் படத்தில் டாக்டர் ஆலன் கிராண்ட் எனும் தொன்மப் படிக ஆராய்ச்சியாளராகத் தோன்றி அன்றைய சிறுவர்களான 90ஸ் கிட்ஸ் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவர் நடிகர் சாம் நீல் (Sam Neill). 


தற்போது 75 வயதாகும் சாம் நீல், ஜூராசிக் பார்க் சீரிஸின் ஆலன் கிராண்டாக பெரும்பாலும் அறியப்பட்டாலும், ஹாலிவுட்டில் பல குறிப்பிடத்தக்க படங்களில் நீல் நடித்துள்ளார். 


முன்னதாக பிரபல இணைய தொடரான ’பீக்கி ப்ளைண்டர்ஸ்’ (Peaky Blinders) சீரிஸில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்ததுடன், இறுதியாக வெளியான ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்திலும் டாக்டர் ஆலன் கிராண்ட்டாகவே தோன்றி தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தார்.


ரத்தப் புற்றுநோய்


இந்நிலையில், தற்போது சாம் நீல் தன் உடல்நிலை குறித்த அதிர்ச்சியான விஷயத்தை தன் சுயசரிதை புத்தகத்திலும் தன் சமீபத்திய நேர்காணலிலும் பகிர்ந்துள்ளார்.


தன் நாள்களை எப்படிக் கழிக்கிறார் என்பது குறித்து தன் சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ள சாம் நீல், ”உங்களிடம் இதை எப்போதாவது கூறினேனா? உண்மையில் நான் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறேன், நான் ஒருவேளை சீக்கிரம் இறக்கப்போகிறேன் என நினைக்கிறேன். அநேகமாக நான் வேறு இடத்துக்கு குடிபெயர வேண்டி இருக்கும்” என எழுதியுள்ளார்.


கடந்த 2022ஆம் ஆண்டு சாம் நீலுக்கு ஆஞ்சியோ இம்யூனோபிளாஸ்டிக் செல் லிம்போமா எனப்படும் ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.  





கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு சாம் நீல் ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் படத்தின்  மூலம் மீண்டும் சென்ற ஆண்டு ஜீராசிக் பார்க் franchise உலகுக்கும் மீண்டும் காலடி எடுத்து வைத்த நிலையில், சக நடிகர்களுடன் பட விளம்பரங்களுக்காக அவர் பயணம் செய்தபோது ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.


'என் செடிகள் வளர்வதைப் பார்க்க வேண்டும்'


த்ற்போது புற்றுநோய் தற்போது மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னதாக தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய சாம் நீல், "நான் இறப்பதைப் பற்றி பயப்படவில்லை, ஆனால் அது என்னைத் தொந்தரவு செய்யும்.


ஏனென்றால் நான் இன்னும் ஒரு தசாப்தம் அல்லது இருபது ஆண்டுகள் உயிர் வாழ விரும்புகிறேன், உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் இந்த அழகான மொட்டை மாடிகளை உருவாக்கி இந்த செடிகளை நட்டுள்ளோம்.  இந்த ஆலிவ் செடிகள், சைப்ரஸ் மரங்கள் வளர்வதைப் பார்க்க நான் உயிர்வாழ விரும்புகிறேன். என் அபிமான பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வளர்வதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் இது மரணத்தைப் பற்றியதா? என்னால் கவலைப்பட முடியவில்லை" எனக் கூறியுள்ளார்.


மேலும், ஆரம்பகால கீமோதெரபி சிகிச்சைகள் பலனளிக்கவில்லை எனக் கூறியுள்ள நீல், தற்போது விலையுயர்ந்த புதிய கீமோதெரபி மருந்து அளிக்கப்பட்டதும் தன் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


பயனளிக்கும் சிகிச்சை




ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் தற்போது இந்த சிகிச்சையைப் பெற்றுள்ள ஒரே நபர் நீல் மட்டுமே.  இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை கனமானது, எனினும் பயனுள்ளதாக இருக்கிறது என நீல் தெரிவித்துள்ளார்.


அவர் தனது வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தான் இதனால் மன மற்றும் உடல்ரீதியாகவும் அழுத்தத்துக்கு ஆளாவதாகவும், பசியுணர்வை இழந்து விட்டதாகவும் நீல் தெரிவித்துள்ளார். எனினும் மருந்து வேலை செய்தபோது அது ஒரு இருண்ட சுரங்கப்பாதையில் வெளிச்சம் போல இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.


சாம் நீல் புற்றுநோயில் இருந்து முழுமையாக இன்னும் மீளாத நிலையில், இந்த நேர்காணல் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.