வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை முதல் பாகம் படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை அள்ளி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில், படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று (ஏப்.06) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன்,  நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜிவ் மேனன், பவானி ஶ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது அவர்கள் பேசியதாவது:


வாய்ப்பளித்த வெற்றிமாறன்


”எப்போதுமே சினிமாவில் அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்றால் வெற்றிப்படத்தில் இருக்க வேண்டும். வெற்றிமாறன் படத்திலும் இருக்க வேண்டும். பல முயற்சிக்கு பிறகு இந்தப்படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறனுக்கு நன்றி. சூரி சூப்பராக நடித்துள்ளார்” எனப்பேசினார்.


விடுதலை படத்தில் குறிப்பாக அசுரத்தனமாக கேமரா மற்றும் ஒளிப்பதிவு குழுவினர் வேலை பார்த்துள்ளதாகப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் முன்னதாகப் பேசினார். ”சில படங்களில் இருப்பதே பெருமை. இந்தப் படத்தில் இருப்பது பெருமை. அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.


’வெற்றி கேட்டார்னு ஓகே சொன்னேன்’


படத்தில் நடித்த இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் “வெற்றி கேட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் படப்பிடிப்புத் தளத்துக்கு சென்ற பிறகு ஆறு பக்க வசனம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை.


அப்போது நடிக்க வேண்டாம் நீங்கள் நீங்களாக இருந்தால் போதும் என்றார். கமல் சொல்வது போல எனக்குள்ள தூங்கிட்டு இருந்த மிருகத்தை எழுப்பாதீங்க என்பது போல எனக்குள்ள தூங்கிட்டு இருந்த நடிகனை எழுப்பி விட்டுட்டீங்க வெற்றி” என மிமிக்ரி செய்து காட்டினார். 


தொடர்ந்து ”நிஜமான மனிதனை படத்தில் காட்டி உள்ளீர்கள். ஒரு தமிழனை படத்தில் இப்படி தான் காட்ட முடியும். அவனது காதலை அடிக்கும் போது இப்படி தான் அவன் இருக்க முடியும், அவனால் அடிக்க முடியாது” எனப் பேசினார்.


அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர், நெட்டிசன்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இந்தப் படம் நல்ல விமர்சங்களைப் பெற்று வருகிறது. எனினும் மற்றொருபுறம், விடுதலை படத்தின் கதை சோளகர் தொட்டி, வீரப்பன் வாழ்ந்ததும் வீழந்ததும், துணைவன் என பல புத்தகங்களை தழுவி எடுக்கப்பட்டது என்றும், கதை திருடப்பட்டுள்ளதாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


விடுதலை படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வார காலம் முடிந்துள்ள நிலையில், படம் இதுவரை மொத்தம் 32.1 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியர் கதாபாத்திரத்துக்கு லீட் கொடுத்து முதல் பாகம் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் பாகம் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை மையப்படுத்தி இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.