விடுதலை பட வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று (ஏப்.06) நடைபெற்றது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, இயக்குநர்கள் வெற்றிமாறன், ராஜீவ் மேனன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது:


களிமண் போல் ஷூட்டிங் சென்றேன்...


”மகிழ்ச்சியில் ரொம்ப திகைத்துப் போய் உள்ளேன். காலையில் படம் வெளியாகும்போது வெற்றி எனக்கு போன் செய்தார். எல்லா கொடுமைகளையும் சகித்துக் கொண்டு படம் நடித்துக் கொடுத்ததற்கு எனக்கு சொன்னார். நான் களிமண் போல தான் சென்றேன். இயக்குனரிடம் இருந்து தான் நான் எல்லாம் பெற்று கொண்டேன்.


மொழி என்பது லேட்டாக தான் கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு முன்பு உணர்வு தான் எல்லாம்.  எனக்கும் கௌதம் மேனனுக்குமான காட்சியின் போது வெற்றிமாறன் பரபரப்பாக இருந்தார். அது என்னிடம் வெளிப்பட்டது. நான் அவரின் அதை சொன்னேன். பின்னர் அவரின் நிதானத்தின் வழியாக தான் நான் எல்லாம் செய்தேன்.


வெற்றிமாறன் மீது மரியாதை!


”நான் நல்ல இயக்குநர் என்று தெரியாது, ஆனால் நல்ல டெயிலர் அதனால் எப்படியாவது தைத்து கொடுத்து விடுவேன்  சேது” என என்னிடம் வெற்றிமாறன் கூறினார். நான் பெண்ணாக பிறக்கவில்லை, இல்லை என்றால் வெற்றிமாறனை உஷார் செய்து விடுவேன். அவரை பார்த்து கூட பேசாமல் இருக்க அது தான் காரணம். சரக்கு அடித்து விட்டு போதையில் பேசினால் கூட நான் வெற்றிமாறன் உடன் மரியாதையாகத் தான் பேசுவேன். 


எனக்கு இன்னும் அவரிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன. சமையல் செய்து கொண்டே இருக்கும் போது அது குறித்து கேள்வி கேட்பது ஒரு சிலர் தான். அப்படி தான் வெற்றிமாறன் என்னிடம் கேட்டார் எப்படி உள்ளது படம் என்று. அவர் ஒரு அற்புதமாக இயக்குனர். நிறைய படிக்கக்கூடியவர். 


’வெற்றிமாறன் தான் வாத்தியார்’


படத்தில் சொல்வது போல ”அவர் மேலே, இவர் கீழே” என்று அவர் யாரையும் நடத்தியது இல்லை. விஜய் சேதுபதியை தனியாகவும் வாத்தியாரை தனியாகவும் சில விமர்சனங்களில் சொன்னார்கள் அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையில் வாத்தியார் வெற்றிமாறன் தான். வாத்தியார் நான் இல்லை. அந்த அறிவும் எனக்கு இல்லை. நான் வெறும் ஸ்பீக்கர் மைக் மாதிரி தான் அதன் பின்னால் இருக்கும் சிந்தனை அவர் தான். 


என்ன படம் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் பணம் போட்டவர்களுக்கு அது கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் தான் வெற்றிமாறன். தனக்கு என்ன வேண்டும் என தெளிவாக இருப்பவர் தான் வெற்றிமாறன். 


சூரியின் நம்பிக்கை!


வெண்ணிலா கபடிக் குழு படத்தின் போது இருந்து சூரி எனக்கு தெரியும். சூரியிடம் அதிகமாக கொஞ்சி குலாவியது கிடையாது. எனக்கு தோன்றுவதை எல்லாம் பேசிக் கொள்வோம்.  சூரி, வெற்றிமாறன் மீது நம்பிக்கை வைத்து, பல போராட்டங்களைக் கடந்து  இந்த நாளுக்காக வந்துள்ளான் என்பது தெரியும். இது சூரிக்கான வெற்றி. வெற்றிமாறன் கொடுத்த வெற்றி. 


இதற்கு மேல் தான் கவனமாக இருக்க வேண்டும் சூரிக்கு யார் என்ன சொல்வார்கள் என்று தெரியும். யார் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று கவனமாக இருக்க வேண்டும்.   இரண்டாம் பாகம் வரும்போது தெரியும். இந்தக் காடு வேல் ராஜ் கட்டுப்பாட்டில் உள்ளது என்று. காட்டின் ராஜா வேல்ராஜ் தான். இந்தப் படம் என்னுடைய நியாபகத்தில் கல்வெட்டில் பொறித்தது போல இருக்கும்”