வெற்றிமாறனின் விடுதலை படத்தைப் பார்த்து பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் பாராட்டியுள்ளார்.


விடுதலையை பாராட்டிய அனுராக்:


பாலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் தென்னிந்திய மொழி படங்களை பொதுவாகவே அதிகம் ரசித்துப் பாராட்டி வருகிறார். குறிப்பாக தமிழ், மலையாள சினிமாக்களின் ரசிகராக வலம் வரும் அனுராக் காஷ்யப், கோலிவுட்டின் முக்கிய இயக்குநர்களான சசிகுமார், பாலா, ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரின் படங்களைத் தொடர்ந்து பார்த்து ரசித்தும் அவர்களுடன் நட்பு பாராட்டியும் வருகிறார்.


ரொம்ப நாளாச்சு:


இந்நிலையில் முன்னதாக விடுதலை படம் பார்த்து ரசித்து அனுராக் காஷ்யப் படத்தைப் பாராட்டியுள்ளார்.


“மிகவும் சக்தி வாய்ந்த படம். முழுக்க முழுக்க அபாரமான நடிப்பு, இப்படி ஒரு சிறந்த ஓப்பனிங் ஷாட் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது.. பாகம் 2க்காக காத்திருக்கிறேன்.. வெற்றிமாறன் சிறப்பானவர்" என அனுராக் காஷ்யப் ட்வீட் செய்துள்ளார்.


 






முன்னதாக இதேபோல் இயக்குநர் அனுராக் காஷ்யப் ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்து அவரை உச்சிமுகர்ந்து வாழ்த்தியிருந்தார். அனுராக் காஷ்யப் முன்னதாக கோலிவுட்டில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்த நிலையில், அடுத்ததாக சசிகுமார் இயக்கத்தில் அனுராக் காஷ்யப், தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியாகும் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


தலைவர்கள் பாராட்டு:


நேற்று முன் தினம் (மார்ச்.31) திரையரங்குகளில் வெளியான வெற்றிமாறனின் படம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தொடங்கி பல அரசியல் தலைவர்கள், உச்ச நடிகர்கள், இயக்குநர் எனப் பலரும் வெற்றிமாறனுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அனைத்து தரப்பு ரசிகர்கள், நெட்டிசன்களின் பாராட்டுகளையும் விடுதலை படம் பெற்று வருகிறது.


நடிகர் சூரிக்கு விடுதலை படம் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ள நிலையில்,  பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில்  விஜய் சேதுபதி போராளியாக வழக்கம்போல் தன் ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளியுள்ளார். மேலும், அடுத்த பாகத்தில் அவரது கதாபாத்திரத்தின் எழுச்சியை முழுமையாகக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.


பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், தமிழ், சேத்தன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.