விடுதலை படத்தில் கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச்.31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. 


விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ,பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கௌதம் மேனன் தமிழ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், இணையத்தில் விவாதப்பொருளாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 


வெற்றிமாறனுடன் இந்தப் படத்தில் இளையராஜா முதன்முறையாக கூட்டணி அமைத்த நிலையில், காட்டு மல்லி, உன்னோட நடந்தா உள்ளிட்ட பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் லைக்ஸ் அள்ளியது. மேலும் சூரியின் கதாபாத்திரமும் அதற்கான அவரது உழைப்பும் அனைவரது பாராட்டுகளைஒயும் அள்ளியது.


ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு  இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியதாகத் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் வாச்சாத்தி சம்பவம், 1987ஆம் ஆண்டு அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல உண்மை சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கதை குறித்த சர்ச்சைகள் எழுந்து விடுதலை படத்தின் கதை வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும், சோளகர் தொட்டி புத்தகங்களின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாக இணையத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.


ஆனால இவற்றின் இடையே விசிக தலைவர் எம்பி தொல், திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத்துறையினரும் இந்தப் படத்துக்கும், வெற்றிமாறனுக்கும், சூரி உள்ளிட்ட நடிகர்களுக்கும் பாராட்டு மழையைப் பொழிந்தனர்.


இந்நிலையில், படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும், திரையரங்குகளில் நேரம் கருதி குறைக்கப்பட்ட காட்சிகள், ஓடிடியில் வெளியிடப்படும்போது இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


படம் குறித்து வந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும், சுமார் 20 நிமிட கூடுதல் காட்சிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


விஜய் சேதுபதியின் வாத்தியர் கதாபாத்திரம் முதல் பாகத்தில் குறைந்த காலமே வந்த நிலையில், முதல் பாகம் அவரது கதாபாத்திரத்துக்கு லீட் கொடுத்து முடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  இரண்டாம் பாகம் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை மையப்படுத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.