வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம்  வெளியாகி 5 நாள்களைக் கடந்துள்ள நிலையில், நேற்று இப்படம் நாடு முழுவதும் 2.20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.


அசுரன் பட வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க,  திரையரங்குகளில் மார்ச்.31ஆம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 1.


விசிக தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர், நெட்டிசன்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இந்தப் படம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.


மேலும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பைப் படம் பெற்று வருகிறது. இந்நிலையில், விடுதலை படம் வெளியாகி கடந்த ஐந்து நாள்களில் இந்தியா முழுவதும் மொத்தம் 16.90 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


விடுதலை படம் முதல் நாள் 3.85 கோடிகளையும்,  இரண்டாம் நாள் 3.8 கோடி ரூபாய் வசூலும், மூன்றாம் நாள் 5.05 கோடி ரூபாய் வசூலையும் நான்காம் நாள் 2 கோடிகளும், ஐந்தாம் நாளான நேற்று தோராயமாக 2.20 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மொத்தம் 40 கோடிகள் பட்ஜெட்டில் விடுதலை திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், உலக அளவில் 25 கோடிகள் வரை வசூலை அள்ளியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


1987ஆம் ஆண்டு தமிழ்நாடு விடுதலை படை நடத்திய அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு, வாச்சாத்தி சம்பவம் என பல சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் விடுதலை படத்தின் கதை அமைந்துள்ள நிலையில், அரச வன்முறை, அத்துமீறல்களை படம் பேசுவதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


மற்றொருபுறம் விடுதலை படத்தின் கதை பற்றிய சர்ச்சைகள் மேலோங்கியுள்ளன. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை என ஒருபுறம் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மற்றொருபுறம் இந்தப் படம் சோளகர் தொட்டி நாவல், வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகம் ஆகியவற்றில் இருந்து திருடப்பட்டுள்ளதாகவும் இணையத்தில் புகார்கள்  தெரிவிக்கப்பட்டு வருகின்றன.


ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். வெளியான நாள் முதல் நல்ல விமர்சங்களை விடுதலை படம் பெற்று வரும் நிலையில், படத்தில் பணிபுரிந்த 25 பேருக்கு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒரு கிரவுண்ட் நிலம், படத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் பரிசாக தங்கக்க்காசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.


காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக வளர்ந்துள்ள நடிகர் சூரிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது விடுதலை படம். நடிகர் விஜய் சேதுபதி போராளியாக நடித்துள்ள நிலையில், பவானி ஸ்ரீ ராஜீவ் மேனன்,  கௌதம் மேனன், சேத்தன், தமிழ்   உள்ளிட்டடோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 


விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியர் கதாபாத்திரத்துக்கு லீட் கொடுத்து முதல் பாகம் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் பாகம் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை மையப்படுத்தி இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இரண்டாம் பாகம் வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.