வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம் 1 திரைப்படம் நான்காம் நாளான நேற்றுடன் நாடு முழுவதும் 1.90 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.  வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விடுதலை பாகம் 1.


14.60 கோடி ரூபாய்:


அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர், நெட்டிசன்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இந்தப் படம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பைப் படம் பெற்று வருகிறது. இந்நிலையில், விடுதலை படம் முதல் நான்கு நாள்களில் இந்தியா முழுவதும் மொத்தம் 14.60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


விடுதலை படம் முதல் நாள் 3.85 கோடி 3.85 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 3.8 கோடி ரூபாய் வசூலும், மூன்றாம் நாள் 5.05 கோடி ரூபாய் வசூலையும் நான்காம் நாள் 1.90 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விடுதலை படம் உலக அளவில் 25 கோடிகளுக்கும் மேல் வசூலை அள்ளியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


உண்மை சம்பவத்தின் தழுவலா?


1987ஆம் ஆண்டு தமிழ்நாடு விடுதலை படை நடத்திய அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு, வாச்சாத்தி சம்பவம் என பல உண்மை சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ள நிலையில், அதிகாரத்தால் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளை படம் பேசுவதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


மற்றொருபுறம் விடுதலை படத்தின் கதை எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை என ஒருபுறம் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மற்றொருபுறம் இந்தப் படம் சோளகர் தொட்டி நாவல், வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகம் ஆகியவற்றில் இருந்து திருடப்பட்டுள்ளதாகவும் இணையத்தில் புகார்கள்  தெரிவிக்கப்பட்டு வருகின்றன.


சூரிக்கு திருப்புமுனை:


முன்னதாக விடுதலை படத்தில்  பணிபுரிந்த 25 பேருக்கு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒரு கிரவுண்ட் நிலம், படத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் பரிசாக வழங்கப்பட்டன.  காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக வளர்ந்துள்ள நடிகர் சூரிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது விடுதலை படம். நடிகர் விஜய் சேதுபதி போராளியாக நடித்துள்ள நிலையில், பவானி ஸ்ரீ ராஜீவ் மேனன்,  கௌதம் மேனன், சேத்தன், தமிழ்   உள்ளிட்டடோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 


விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியர் கதாபாத்திரத்துக்கு லீட் கொடுத்து முதல் பாகம் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் பாகம் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை மையப்படுத்தி இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


மேலும் படிக்க: Kajal Agarwal : மதிப்பு, ஒழுக்கம் குறைவாக இருக்கும் இடம் எனக்கு தேவையில்லை... தென்னிந்திய சினிமா பற்றி காஜல் அகர்வால் சொன்ன கருத்து !