தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு தாயான பிறகு திரைவாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ஜெயம்ரவி, சூர்யா, கார்த்தி, விஷால் என அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் மிகவும் பிஸியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் பாலிவுட் சினிமா குறித்து தெரிவித்த தகவல் ஒன்றை இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது திரை பயணம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். தென்னிந்திய சினிமாவில் காஜல் அகர்வால் அதிக கவனம் செலுத்துவதற்கு என்ன காரணம் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் " இந்தி தான் எனது தாய் மொழி மற்றும் ஹிந்தி படங்களை பார்த்து வளர்ந்தவள் நான். இருப்பினும் நான் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். ஏனெனில் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் ஒழுக்கம், அறம், மதிப்பு இவை அனைத்தும் இந்தி திரையுலகில் குறைவு என நினைக்கிறேன். பலரும் இந்தி திரையுலகில் அறிமுகமாவே விரும்புகிறார்கள். அப்போது தான் இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.
தென்னிந்திய சினிமா அனைவரையும் வரவேற்க கூடிய ஒரு இடம். இங்கிருக்கும் இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருமே திறமையானவர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி திரையுலகில் இருப்பவர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். அதனால் தான் அவர்களால் சிறப்பான கன்டென்ட் கொண்ட திரைப்படங்களை எடுக்க முடிகிறது. இங்கு நடிப்பதனால் வெரைட்டியான கதாபாத்திரங்களும் கிடைக்கின்றன. அதனால் வெற்றி பெறுவதற்கு எளிதான ஒரு வழியும் உழைப்புக்கு குறுக்கு வழி எதுவும் தேவையில்லை என்பது எனது கருத்து என தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமா பற்றி அவர் கூறிய இந்த கருத்து தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.