நடிகர் சூரி: 


தமிழ் சினிமாவில் விடுதலை படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் நடிகர் சூரி. அதுவரையில் அவரை காமெடியனாக பார்த்து வந்த ரசிகர்கள் விடுதலை பார்ட் 1 படத்தின் மூலமாக ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்க தொடங்கினர். அவர் தொட்டது எல்லாமே வெற்றியாக இப்போது மாறி வருகிறது.


விடுதலை பார்ட் 1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதால்,  இந்த படத்தைத் தொடர்ந்து கருடன் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் . இந்தப் படம் சூரியின் எதார்த்தமான நடிப்பை கொண்டாட செய்தது. அதன் பிறகு கொட்டுக்காளி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், வசூலில் போதுமான அளவு வரவேற்பு பெறவில்லை.


விடுதலை 2 வசூல்:


தற்போது விடுதலை பார்ட் 2 படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விடுதலை பார்ட் 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படம் வெளியாகி 3 நாட்கள்,  ரூ.22.25 கோடி வசூல் குவித்து மகாராஜாவின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.




இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாக படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சூரி இதுவரையில் தான் கடந்து வந்த பாதை குறித்து சினிமாவில் பட்ட கஷ்டத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். படையப்பா படத்தில் கூட ஃபேன் பாயாக பணியாற்றியதாகவும், 95 இயக்குநர்களிடம் பணியாற்றிவிட்டதாக கூறியிருந்தார். அதோடு தன்னுடைய அப்பாவின் நகைச்சுவை உணர்வு குறித்தும் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்ட சூரி தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவின் கதையை வைத்து ஒரு படம் கண்டிப்பாக இயக்குவேன் என்று கூறியிருக்கிறார். 


அப்பா - அம்மா கதையை இயக்க விரும்பும் சூரி:


இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அப்பா முத்துச்சாமி, அம்மா சேங்கைய அரசி. இவர்களைப் பற்றி நான் ஒரு கதையே வைத்திருக்கிறேன். அவர்களுக்கான கதையை இயக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். கண்டிப்பாக படம் இயக்குவேன். இப்போது கேட்கும் போது சர்வ சாதாரணமாக இருக்கும். ஆனால், படமாக வரும் போது உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும். அவர்களைப் பற்றி அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று சூரி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.