தமிழ் சினிமாவில் சிரிப்புக்கு அடையாளம் கொடுத்தவர் மதன் பாப். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். மதன் பாப் என்றதும் அவரது சிரிப்புதான் ஞாபகத்திற்கு வரும். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் நடிகர் மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மதன் பாப் வடிவேலுவுடன் சேர்ந்து பல காமெடி படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இன்று வரை ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படமாக ப்ரண்ட்ஸ், கிரி பட காமெடிகள் இருக்கிறது. சினிமாவை தாண்டி அவர் சன் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்திருக்கிறார். இந்நிலையில் அவரது மறைவுக்கு மதுரை முத்து மனம் உருகி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,  "மதன் பாப் சார் சிரிப்பை பார்த்தாலே போதும் அனைத்தும் மறந்து விடும். நான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது முதல் நடுவராக இருந்தார். அவருடன் 7 ஆண்டு காலம்  கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் பயணித்திருக்கிறேன். 

இயக்குநர் ராஜ்குமார் என்னை எப்படி அறிமுகப்படுத்தினாரோ அதேபான்று மதன் பாப் சார்  மதுரை முத்து எங்கள் சொத்து என்று சொன்னார். அவர் சொன்னது போலவே எனது வாழ்க்கையும் உயர்ந்தது. அவரது அந்த சொல் இன்று வரை பலிக்கிறது. கிராமத்தில் இருந்து வரும் எங்களை போன்ற கலைஞர்களை உற்சாகப்படுத்தி கொண்டே இருப்பார். அவர் இன்னும் 20 ஆண்டுகாலம் இருந்து பலரையும் சிரிக்க வைத்திருக்கலாம். இறைவன் அவரை அழைத்துக்கொண்டார் என மதுரை முத்து கண்ணீர் மல்க பேசினார்.