Maruti Suzuki Dzire: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை மாதத்தில் மட்டும் மாருதி சுசூகி டிசையர் காரின் 20 ஆயிரத்து 895 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

விற்பனையில் அசத்திய டிசையர்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த ஜுலை மாதத்தில் பதிவான கார் விற்பனை தொடர்பான தரவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, உள்நாட்டில் மட்டும் விற்பனையான 1.37 லட்சம் யூனிட்களுடன் சேர்த்து, ஒட்டுமொத்தமாக மாருதி சுசூகி நிறுவனம் 1.8 லட்சம்  யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதோடு, ஜுலை மாதத்தில் அதிகம் விற்பனையான கார் மாடல்களின் பட்டியலிலும், மாருதியின் டிசையர் கார் தான் முதலிடம் பிடித்துள்ளது. பயணிகள் வாகன பிரிவில் 20 ஆயிரத்து 895 யூனிட்களை விற்பப்னை செய்து இந்த இடத்தை பிடித்துள்ளது. மாருதியின் ப்ரேஸ்ஸா, ஹுண்டாய் க்ரேட்டா, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ போன்ற எஸ்யுவிக்களின் எழுச்சிக்கு மத்தியிலும், மாருதியின் டிசையர் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.

மக்களை கவரும் டிசையர்

டிசையர் கார் மாடல் பல ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவது கவனிக்க வேண்டிய விஷயமாகும். இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் டிசையர் அடிக்கடி இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஒரே மாதத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்படுவது மிகப்பெரிய விஷயமாக பார்க்க வேண்டியுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16,996 யூனிட்களும், மே மாதத்தில் 18,084 யூனிட்களும் மற்றும் ஜுன் மாதத்தில் 15,484 யூனிட்களும் டிசையர் சார்பில் விற்பனையாகியுள்ளன.

டிசையரை பயனர்கள் விரும்புவது ஏன்?

மாருதியின் டிசையர் கார் மாடலானது எரிபொருள் செயல்திறன், காம்பேக்ட் சைஸ் மற்றும் மலிவு விலை ஆகிய காரணங்களால் பயனர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றது என்பதோடு, நம்பகத்தன்மை மற்றும் மறுவிற்பனையின்போதும் நல்ல விலையை பெறுவது ஆகிய அம்சங்களும் இந்த காரின் மதிப்பை உயர்த்துகிறது. நல்ல இடவசதி, விலைக்கு ஏற்ற தாராளமான தொழில்நுட்ப அம்சங்கள், வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை, முதல்முறை கார் வாங்க முடிவு செய்வோருக்கு டிசையரை நல்ல தேர்வாக மாற்றுகிறது.

டிசையர் விலை, போட்டியாளர்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, டிசையரின் நான்காவது தலைமுறை மாடல் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காலத்திற்கு ஏற்ப பல்வேறு அப்க்ரேட்களை பெற்றுள்ள இந்த காரின் விலையானது, ரூ.6.84 லட்சத்தில் தொடங்கி ரூ.10.19 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. உள்நாட்டில் இந்த காரானது ஹோண்டா அமேஸ், ஹுண்டாய் ஆரா மற்றும் டாடா டைகோர் உள்ளிட்ட காம்பேக்ட் செடான்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.

மாருதி டிசையர் வெளிப்புற அம்சங்கள்:

வெளிப்புத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட க்ரில், ஒருங்கிணைக்கப்பட்ட பகல் நேரங்களில் எரியும் விளக்குகளுடன் கூடிய, கூர்மையான எல்இடி க்ரிஷ்டல் விஷன் முகப்பு விளக்குகள், மேம்படுத்தப்பட்ட எல்இடி டெயில் லேம்ப், புதிய 15 இன்ச் அலாய் வீல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா உள்ளிட்ட அம்சங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 

மாருதி டிசையர் உட்புற அம்சங்கள்:

மரக்கட்டையால் ஆன ஆக்செண்டுடன் டூயல் டோன் டேஷ்போர்டை உட்புறத்தில் கொண்டுள்ளது. வயர் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ உடன் கூடிய 9 இன்ச் ஸ்மார்ட்ப்ரோ + டச்ஸ்க்ரீன், அர்கமிஸ் சரவுண்ட் சவுண்ட், க்ரூஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ரியர் ஏசி வெண்ட்ஸ், ரியர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் சுசூகி கனெக்ட் டெலிமேடிக்ஸ் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி டிசையர் பாதுகாப்பு அம்சங்கள்:

டிசையர் கார் மாடலனாது மாருதியின் 5வது தலைமுறை ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. 45 சதவிகித ஹை-டென்ஷைல் ஸ்டீல் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், EBD உடன் கூடிய ABS, ப்ரேக் அசிஸ்ட், அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட், குழந்தைகளுக்கான ISOFIX இருக்கை வசதி மற்றும் ரியர் டீஃபாகர் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் நிலையானதாக வழங்கப்படுகின்றன. சர்வதேச அளவிலும், தேசிய அளவில் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாருதியின் முதல் கார் என்ற பெருமையும் டிசையரையே சேரும் என்பது குறிப்பிடத்தகக்து.

மாருதி டிசையர் இன்ஜின் விவரங்கள்:

டிசையர் கார் மாடலில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைந்து 81.58PS மற்றும் 111.7Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. கூடுதலாக 69.75PS மற்றும் 101.8Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய சிஎன்ஜி ஆப்ஷனும் கிடைக்கிறது. பெட்ரோல் மேனுவல் எடிஷன் லிட்டருக்கு 24.79 கிலோ மீட்டரும், பெட்ரோல் டீசல் எடிஷன் லிட்டருக்கு 25.71 கிலோ மீட்டரும் மற்றும் சிஎன்ஜி எடிஷன் லிட்டருக்கு 33.73 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக மாருதி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI