விடாமுயற்சி அப்டேட் :
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது. படம் குறித்த அப்டேட் எதுவும் வெளிவருதல் படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவின. அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் கதாபாத்திரங்கள் பெயர்கள் நாளை வெளியிடப்பட உள்ளதாக அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஆனந்த் அம்பானிக்கு அட்லீயின் பரிசு :
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணம் கடந்த ஜூலை 12ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டனர். அந்த வகையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அட்லீ ஒரு விருந்தினராக மட்டும் செல்லவில்லை, மாறாக யாரும் அளிக்காத ஒரு அரிய பரிசை திருமண தம்பதிகளுக்கு அளித்துள்ளார். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் போல் அனிமேஷன் செய்யப்பட்ட ஒரு குட்டி அனிமேஷன் திரைப்படம் ஒன்று திருமணத்துக்கு முதல் நாள் திரையிடப்பட்டது. இந்த 10 நிமிட குறும்படத்தை எடுத்தவர் அட்லீ. அட்லீயின் இந்த திருமண பரிசு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்தியன் 2 படத்துக்கு புதிய சிக்கல் :
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் ஊழலுக்கு எதிரான வலுவான கருத்துகளை முன்வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா வரும் காட்சியில் இ-சேவை மையத்தினர் 300 ரூபாய் கொடுத்தால் மட்டுமே சேவை செய்ய முடியும் என தவறுதலாக சித்தரித்து எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என எதிர்ப்பு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நல சங்கம் சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து பேசப்பட்டது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இயக்குநர் ஷங்கர் மீது புகார் மனு அளிக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் :
கடந்த பிப்ரவரி மாதம் உண்மை கதையை மையமாக வைத்து மலையாளத்தில் வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். அனைத்து மொழிகளிலும் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் 2024ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட ஒரு படமாக அமைந்தது. 20 கோடியில் உருவான இப்படம் 240 கோடி வரை வசூலித்தது. இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக பாலிவுட்டில் களம் இறங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஃபாண்டம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிதம்பரம் இயக்க இருப்பதாக தகவல் தெரிவிகின்றன.
ஸ்டண்ட் மாஸ்டருக்கு கார்த்தி அஞ்சலி :
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி இயக்கத்தில் வெளியான படம் சர்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அப்படம் உலகளவில் 100 கோடி வசூலை ஈட்டியது. அதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 15ம் தேதி சென்னையில் துவங்கியது. இரண்டாம் நாள் படப்பிடிப்பின் போது யாரும் எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்தில் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேலிருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சர்தார் 2 படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவும் ஆழந்த இரங்கலை தெரிவித்தனர். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லப் பட்ட ஏழுமலையின் உடலை நடிகர் கார்த்தி சென்று பார்த்து கலங்கிய முகத்துடன் இறுதி அஞ்சலியை செலுத்தினார்.