தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித். துணிவு படத்திற்குப் பிறகு அஜித் நடிப்பில் பல சிக்கல்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட படம் விடாமுயற்சி. விக்னேஷ் சிவன் மாற்றப்பட்ட நிலையில், புது இயக்குனர் யார்? என்று கேள்வி எழுந்தபோது அந்த மகிழ் திருமேனி இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.
தூக்கமே வரல:
விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி அஜித் பற்றி பேசியுள்ளார். அஜித்திடம் போனில் பேசிய அந்த இரவில் எனக்கு தூக்கமே வரவில்லை. ஏனென்றால் நான் எதிர்பார்க்காத வாய்ப்பு இது. நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். என் குடும்பத்திடம் இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டேன்.
குறிப்பிட்ட இரண்டு நண்பர்கள் தவிர யாரிடமும் நான் சொல்லவும் இல்லை. உறுதி செய்யும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அதற்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர தாமதமாகிவிட்டது. ஆனால், நாங்கள் வேலையைத் தொடங்கிவிட்டோம்.
அஜித் பேசியது என்ன?
சார் அதைத்தான் சொன்னார். அப்போதும் கூட, அவர் தயாரிப்பாளர் பற்றிதான் சொன்னார். தயாரிப்பாளருக்கு நாம் சிரமத்தை ஏற்படுத்திடக் கூடாது. அதனால், உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றார். அதனால், உடனடியாக ஆரம்பித்த வேலை இது.
சுபாஷ் சார் பத்தியும் சொல்லனும். அவரை இரண்டு மூன்று முறை சந்தித்தேன். மனிதாபிமானம் மிக்க நபர் அவர். அவருடைய நட்பும், ஆதரவும் கிடைத்ததும் எனக்கு மிகப்பெரிய பலமாக நான் பார்க்கிறேன் என்றார்.
த்ரில்லர் விடாமுயற்சி:
2010ம் ஆண்டு முன்தினம் பார்த்தேனே படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான மகிழ் திருமேனி, தடையற தாக்க படம் மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அவர் இயக்கிய மீகாமன் படம் மிகவும் வித்தியாசமான திரைக்கதையுடன் த்ரில்லர் படமாக வந்தபோதிலும் பெரிதும் வெற்றி பெறவில்லை.
ஆனாலும், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. பின்னர், அவர் இயக்கிய தடம், கலகத் தலைவன் படம் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில், அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்தை அவர் இயக்கியுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்குனராகியது எப்படி?
இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார். துணிவு படத்திற்கு பிறகு அஜித், லைகா நிறுவனத்திற்கு கால்ஷீட் வழங்கியிருந்தார். இதற்கு இயக்குனராக விக்னேஷ் சிவன் ஒப்பந்தமாகியிருந்தார்.
ஆனால், விக்னேஷ் சிவன் கதையில் அஜித் - லைகா நிறுவனம் திருப்தி அடையாத காரணத்தால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, உடனடியாக இயக்குனரைத் தேடும் பணியில் ஈடுபட்ட லைகா மகிழ் திருமேனியை தேர்வு செய்தது. விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. பொங்கல் வெளியீடாக வர வேண்டிய படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு தற்போது வெளியாக உள்ளது.