Vidaamuyarchi Day 2 Collection: அஜித்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின், வார இறுதி வசூல் சற்றே அதிகரித்துள்ளது.


விடாமுயற்சி வார இறுதி வசூல் நிலவரம்:


லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் த்ரிஷா, உள்ளிட்டோர் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இர்ண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு வெளியான இப்படத்தின் மீது, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். ஆனால், ரசிகர்களை திருப்திபடுத்தும்படியான கமர்சியல் எலிமெண்ட்கள் படத்தில் இல்லை என, பல்வேறு தரப்பினரும் கலவையான விமர்சனங்களையே தந்தனர். இதனால், படத்தின் இரண்டாவது நாள் வசூல் கடுமையாக சரிந்தது. இருப்பினும் வார இறுதியில் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிவார்கள்,  படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் முதல் வார இறுதியில் விடாமுயற்சி படத்தின் வசூல் நிலவரம் குறித்து கீழே விவரிக்கப்பட்டுளது.


விடாமுயற்சி வசூல் - எதிர்பார்ப்பு பலித்ததா?  


சாக்னில்க் இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, விடாமுயற்சி திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் இந்தியாவில் மொத்தமாக சுமார் 62.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முதல் நாள் முடிவில் சுமார் 26 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் அந்த வசூல் 10.25 கோடி ரூபாயாக சரிந்தது. இருப்பினும் வார இறுதியின் முதல் நாளான சனிக்கிழமை அன்றும் சற்றே அதிகரித்து 13.5 கோடி ரூபாயை விடாமுயற்சி வசூலித்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று சுமார் 13 கோடி ரூபாயை, விடாமுயற்சி படம் இந்தியாவில் வசூலித்ததாக கூறப்படுகிறது. கணித்தபடியே, வார இறுதியில் படத்தின் வசூல் அதிகரித்தாலும், தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு அந்த வசூல் அமையவில்லை என்பதையே தரவுகள் காட்டுகின்றன.


விடாமுயற்சி மொத்த வசூல் நிலவரம்:


இந்தியாவில் வெளியான முதல் 4 நாட்களில் விடாமுயற்சி திரைப்படம் 62.75 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் மொத்தமாக இதுவரை 32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மூலம், இப்படம் சர்வதேச திரைப்பட சந்தையில் ஒட்டுமொத்தமாக சுமார் 94.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. படத்தின் மீது இருந்த பெரும் எதிர்பார்ப்பால், வெளியான ஒரு சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் எனும் வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் வார இறுதியை கடந்த பிறகும் அப்படத்தின் வசூல், எதிர்பார்த்தபடி 100 கோடியை தாண்டவில்லை. அதோடு, காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் மட்டும், 9 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதனால், விடாமுயற்சிக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறையக் கூடும். அது வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.


விடாமுயற்சி கதைக்களம்


திருமணமான 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ அஜித்தும், த்ரிஷாவும் முடிவு எடுக்கின்றனர். அதற்காக த்ரிஷாவை அவரது வீட்டில் விடுக்க செல்லும்போது, அவர் கடத்தப்படுகிறார். இதையடுத்து தனது மனைவியை அஜித் மீட்டாரா? இல்லையா? அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா என்பதே படத்தின் ஒன்லைன் ஆகும்.