நடிகர் அஜித் குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி (Vidaamuyarchi) படம் குறித்த பொங்கல் ஸ்பெஷல் அப்டேட் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகள், சர்ச்சைகள், குழப்பங்கள் தாண்டி அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முழு வீச்சில் தற்போது தயாராகி வருகிறது விடா முயற்சி திரைப்படம்.
லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜர்பைஜான் நாட்டில் தற்போது இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நடிகை த்ரிஷா, அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ், சஞ்சய் தத் என பலர் நடித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக அஜித்தின் ஏர்போர்ட் லுக்ஸ், விடாமுயற்சி படப்பிடிப்பு தள புகைப்படங்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வந்தன.
இந்நிலையில் தற்போது பொங்கல் ஸ்பெஷல் அறிவிப்பாக விடாமுயற்சி படம் குறித்த அறிவிப்பு ஒன்றை நெட்ஃப்ளிஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதன்படி விடாமுயற்சி திரைப்படம் திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
விடாமுயற்சி திரைப்படத்துக்கு பெயரிடப்படுவதற்கு முன்னதாக, விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்தபோதே இப்படத்தின் உரிமையை தாங்கள் வாங்கியுள்ளதாக கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளம் அறிவித்தது.
சென்ற ஆண்டு பொங்கல் ரிலீசாக துணிவு திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருந்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் இந்த அறிவிப்பினைப் பகிர்ந்தது. இந்நிலையில் தற்போது ஓராண்டு கழித்து தங்கள் அறிவிப்பினை மீண்டும் உறுதி செய்து நெட்ஃப்ளிக்ஸ் தரப்பில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது.