விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள  மெரி கிறிஸ்துமஸ் படம் வெற்றிபெற கத்ரீனா கைஃபின் கணவர் விக்கி கெளஷல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மெரி கிறிஸ்துமஸ்


ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப் பட்டுள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ராதிகா சரத்குமார் சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் ஆகியோரும் தமிழ் பதிப்பில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் காம்பினேஷனில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை ரசிகர்கள் ட்விட்டரின் பாராட்டி வருகிறார்கள். 






மெரி கிறிஸ்துமஸ் படம் ஒரு நிதானமான த்ரில்லர் படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்படியான நிலையில்  நடிகை கத்ரீனா கஃபின் கணவர் நடிகர் விக்கி கெளஷல் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விஜய் சேதுபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


நீ நடித்ததில் சிறந்த படம்


தனது மனைவி கத்ரீனாவைப் பற்றி நடிகர் விக்கி கெளஷல் இப்படி கூறியுள்ளார் “ ஸ்ரீராம் ராகவனின் கதைசொல்லலுக்கு ஏற்ற வகையில் உங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்திருக்கிறீர்கள். மரியாவின் கதாபாத்திரம் அவளது மர்மம்  அவளது  மேஜிக் எல்லாவற்றை அவ்வளவு நேர்மையாகவும் நுட்பமாகவும் நடித்திருக்கிறாய். குறிப்பாக அந்த நடனக் காட்சி சிறப்பு. இதுவரை நீ நடித்ததில் இதுதான் சிறந்த படம் “ 






நடிகர் விஜய் சேதுபதி குறித்து  “ஆல்பர்ட் கேரக்டரில் எப்படி உங்களால் இவ்வளவு குழந்தைத்தனமான இன்னசென்ஸை கொண்டு வர முடிந்தது என்று ஆச்சரியப்படுகிறேன்”  ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


 பொங்கல் வெளியீடு


இந்த பொங்கலுக்கு மெரி கிறிஸ்துமஸ், கேப்டன் மில்லர், அயலான், மிஷன் உள்ளிட்டத் தமிழ் படங்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள குண்டூர் காரம் படம் வெளியாகியுள்ளது.