வேட்டையன்
த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , துஷாரா விஜயன் , ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள் . ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் படு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்து வருகிறார் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல்.
முள்ளும் மலரும் ரஜினியை பாப்பீங்க
“ ரஜினி நடித்த படங்களில் எனக்கு ரொம்ப பிடித்த படம் முள்ளும் மலரும். எனக்கு மிக பிடித்த இயக்குநர்களில் இயக்குநர் மகேந்திரனும் ஒருவர். ரஜினியின் ஒட்டுமொத்த கரியரில் ஒரு சிறந்த படத்தின் பெயரை சொல்லச் சொன்னால் நான் முள்ளும் மலரும் பெயரைச் சொல்வேன். ஒரு ஸ்டாராக இல்லாமல் ரஜினிகாந்த் எப்படிபட்ட ஒரு நடிகர் என்பதற்கு சான்று இந்த படம். உங்ககள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் கதைகளை நீங்கள் தேர்வு செய்து நடிக்கவில்லை என்று நான் ரஜினி சாரிடம் சொன்னேன். நானே இப்போதுதான் உருப்படியான வழியில் போய்க் கொண்டிருக்கிறேன் என்னை ஏன் இழுத்து விடுறீங்க என்று ரஜினி என்னிடம் சொன்னார்.
வேட்டையன் படத்தில் ஒரு சில இடங்களில் நீங்கள் முள்ளும் மலரும் ரஜினி சாயலைப் பார்க்கலாம். முள்ளும் மலரும் படத்தின் ‘கெட்ட பையன் சார் இந்த காளி’ வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் அந்த ஒரு வரி மட்டும் வரும்படி அனிருத்திடம் கேட்டேன். முழுவதுமாக இல்லை என்றாலும் வேட்டையன் படத்தில் சில இடங்களில் அப்படத்தின் சாயலை நீங்கள் பார்ப்பீர்கள்” என ஞானவேல் தெரிவித்துள்ளார்.