கோலிவுட்டின் உச்சநட்சத்திரம் கமல்ஹாசன் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற சூப்பர் ஹிட் திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. இப்படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாகக் கைக்கோர்த்த நிலையில், தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக வேட்டையாடு விளையாடு உருவெடுத்தது.
வேட்டையாடு விளையாடு:
கமலினி முகர்ஜி, ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே, பார்த்த முதல் நாளே, கற்க கற்க என இப்படத்தின் பாடல்கள் இன்றுவரை தொடர்ந்து லைக்ஸ் அள்ளி இன்ஸ்டா ரீல்ஸ்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
சமீபத்தில் கோலிவுட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா வரை பலரும் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை மேற்கோள் காட்டி இன்றுவரை பேசி வருகின்றனர். இந்நிலையில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இப்படம் தற்போது ரீ- ரிலீஸ் ஆகியுள்ளது.
ரீ ரிலீஸ்:
செவன்த் சேனல் கம்யூனிகேஷன் சார்பில் மாணிக்கம் நாராயணன் இப்படத்தை முன்னதாகத் தயாரித்திருந்த நிலையில், தற்போதைய தொழில்நுட்பப் பாய்ச்சல் காலத்தில் தரம் மேம்படுத்தப்பட்டு ரீ - ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் ரசிகர்கள் திரள் திரளாக தியேட்டர்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், தொடர்ந்து இப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இப்படம் சென்னை, கோயம்புத்தூர் நகரங்களில் பெரும்பாலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டேனியல் பாலாஜி மகிழ்ச்சி:
இந்நிலையில் இப்படத்தில் சீரியல் கில்லர் மற்றும் சைக்கோ கொலையாளியாகக் கலக்கிய நடிகர் டேனியல் பாலாஜி ‘வேட்டையாடு விளையாடு’ ரீ ரிலீஸுக்கு மகிழ்ச்சி தெரிவித்து பேசியுள்ளார்.
“டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 7.1 தரத்தில் வெளியாக உள்ளது. நான் இதை தியேட்டரில் பார்க்க ஆர்வமாக உள்ளேன். நாங்கள் பார்க்கும் போது படம் 5.1 தரத்தில் தான் வெளியானது. 7.1 தரத்தில் இப்படம் என்ன உணர்வைக் கொடுக்கிறது எனப் பார்க்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.
நடிகர் டேனியல் பாலாஜி அமுதன் எனும் வில்லனாக வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்திருந்த நிலையில், படம் பார்ப்பவர்களை அச்சுறுத்திய இந்தக் கதாபாத்திரத்துக்காக அன்றைய காலக்கட்டத்தில் பாராட்டுகளைக் குவித்தார். மறுபுறம் இக்கதாபாத்திரம் தன்பாலின ஈர்ப்பாளராக சித்தரிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி எதிர்ப்புகளைப் பெற்றது.
மறைந்த பிரபல நடிகர் முரளியின் உறவினரான நடிகர் டேனியல் பாலாஜி, நடிகை ராதிகா நடித்த “சித்தி” சீரியலில் டேனியல் எனும் கதாபாத்திரத்தில் தோன்றி தன் வில்லத்தனத்தால் மிரட்டினார்.
அதன்பின் அவருடைய பெயர் டேனியல் பாலாஜியாக மாறியது. தொடர்ந்து அலைகள், அண்ணாமலை உள்ளிட்ட சீரியல்களில் கலக்கிய டேனியல் பாலாஜி 2002ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.