தமிழ் சினிமாவில் இன்று அதாவது மார்ச் மாதம் 20ஆம் தேதி மதியத்தில் இருந்து மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்படும் செய்தி என்றால் அது, தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவது தொடர்பாகத்தான்.


இந்த படத்தில் இளையராஜா கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கின்றார். இந்த படத்தினை தனுஷ் நடித்து பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் படத்தினை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவே இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. 


இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றி மாறன் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது, ”இளையராஜாவைப் பற்றி நான் என்ன பேச நினைத்தேனோ அவற்றையெல்லாம் எனக்கு முன் பேசிய அனைவரும் பேசிவிட்டனர். எனக்கு இளையராஜா பாடலை எப்போது கேட்டாலும், அது தாயின் அன்பைப் போல் மனதுக்குள் அப்படியே இருக்கும். இளையராஜா சாருடன் பழகுவது மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் எந்தவித குழப்பமும் இல்லாமலும் ஒரு நண்பருடன் பழகுவதைப்போல் இருக்கும். இந்த மேடையில் நண்பர் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக் காரணம், அவர் இயக்குநரை நட்புணர்வுடனே அணுகுகின்றார். இதனால் தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். 






இளையராஜா சார் விடுதலை படத்தை பார்த்துவிட்டு அவருக்கு ஒன்று தோன்றுவதாகக் கூறி என்னிடம் அவருடைய கருத்தைக் கூறினார். மேலும் ஒரு இசையமைப்பாளராகத்தான் இதைக் கூறுகின்றேன். ஒரு இயக்குநராக உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய் எனக் கூறினார். அவருடன் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி. இளையராஜாவின் மியூசிக் எப்போதும் மேஜிக்தான். அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகின்றது என்றால் அது மிகப்பெரிய விஷயம். அந்த படத்தைப் பார்க்க உங்களைப்போல நானும் ஆவலுடன் இருக்கின்றேன்” எனக் கூறினார்.