ஒரு சில நடிகர்கள் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் லீட் கேரக்டர்களையும் கடந்து மனதில் பதிந்து விடும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு நேர்த்தியான நடிகர் தான் நடிகர் கிஷோர். தனக்கென ஒரு தனி அடையாளத்தை முதல் படத்திலேயே பதிவு செய்தவர். 


இமேஜூக்குள் சிக்காதவர் :


'வனயுத்தம்' படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனாகவும், 'ஹரிதாஸ்' திரைப்படத்தில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் அப்பாவாகவும் வித்தியாசமான பரிணாமத்தை வெளிப்படுத்தினர். மேலும் தூங்காவனம், கபாலி, புலி முருகன், ஆரம்பம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் மிகவும் இயல்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கனக்கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒரு சில நடிகர்களில் நிச்சயம் கிஷோரும் இடம்பெறுவார். 


வாய்ப்பு கிடைத்ததன் பின்னணி :


'பொல்லாதவன்' படத்தில் அடிதடி, கொலை, கடத்தல் செய்யும் ரவுடி செல்வமாக அனைவரின் பாராட்டையும் பெற்றார். கிஷோருக்கு 'பொல்லாதவன்' படத்தில் வாய்ப்பு கிடைத்ததற்கு பின்னால் ஒரு ஸ்வாரஸ்யமான கதை இருக்கிறது. 


மணிமாறன் இயக்கத்தில், வெற்றிமாறன் தயாரிப்பில் 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'என்.ஹெச்4'. இப்படத்தை தான் இயக்குநர் வெற்றிமாறன் 'தேசிய நெடுஞ்சாலை' என்ற பெயரில் முதல் படமாக இயக்க திட்டமிட்டு இருந்தார். அப்படத்தில் கன்னடமும் தமிழும் தெரிந்த நடிகர் ஒருவர் தேவைப்பட்டார். அதற்காக தான் நடிகர் கிஷோர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த சமயத்தில் வெற்றிமாறனின் முதல் படமாக 'பொல்லாதவன்' படம் உருவானதால் அதில் செல்வமாக மாறினார் நடிகர் கிஷோர்.  


பரஸ்பர மரியாதை :


அப்படத்தைத் தொடர்ந்து  இயக்குநர் வெற்றிமாறன் படங்களில் நிச்சயம் கிஷோருக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கும். அப்படி அமைந்த வாய்ப்புகள் தான் ஆடுகளம், விசாரணை, வட சென்னை உள்ளிட்ட படங்கள். சிறப்பான ஒரு இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையே இருக்கும் பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடாகவே அது பார்க்கப்படுகிறது.


சினிமாவின் கம்யூனிஸ்ட் :


அந்த வகையில் நடிகர் கிஷோர் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் நேர்காணல் ஒன்றில் ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார். "நான் பார்த்த மனிதர்களில் நடிகர் கிஷோர் மிகவும் வித்தியாசமானவர். அவருடைய பெர்சனாலிட்டி அவ்வளவு பெருசு. நான் சினிமாவில் பார்த்த ஒரு கம்யூனிஸ்ட். அவரை அவரே காந்தியன் என்று தான் சொல்லிக்கொள்வார்.


நான் அவரை அப்படி சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய வேலைகளை அவரே தான் செய்து கொள்வார். அவருக்கு யாராவது ஏதாவது செய்கிறார்கள் என்றால் உடனே பதட்டமாகிவிடுவார். மிகவும் சீரியஸாக இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். மிகவும் சிறந்த மனிதர்" என வெற்றிமாறன் நடிகர் கிஷோரின் மறுபக்கம் குறித்து பேசியுள்ளார்.