விடுதலை 2


வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , சூரி , மஞ்சு வாரியர் நடித்து கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான படம் விடுதலை 2. பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன் , ஆடுகளம் , விசாரணை , வடசென்னை , அசுரன் என தொடர் வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு விடுதலை முதல் பாகம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் சூரி நாயகனாக அறிமுகமானார். 


தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கதைக்களம் ரீதியாகவும் அரசியல் தெளிவு ரீதியாகவும் விடுதலை படம் ஒரு பெரும் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் படத்தில் பேச அடுத்துக் கொண்ட அரசியல் கதைக்களத்தை சரியான ஒரு திரைக்கதையில் இணைக்க வெற்றிமாறன் சறுக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றிமாறன் படங்கள் என்றாலே டப்பிங்கில் பல நான் சிங்க் இருக்கும். இதுவரை இந்த சின்ன பிழைகளை சகித்துக் கொண்டு வந்த ரசிகர்கள் இந்த முறை கொஞ்சம் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதுவரை தோல்விப் படங்களே கொடுக்காத வெற்றிமாறன் முதல் முறையாக ஃப்ளாப் கொடுத்துள்ளதாக பலர் தெரிவித்து வருகிறார். 


திரைக்கதை ரீதியாக விடுதலை படத்திற்கு மாற்று கருத்துக்கள் இருந்தாலும் 100 ஆண்டுகால தமிழ் சினிமாவில் இவ்வளவு வெளிப்படையாக வரலாற்றையும் அரசியலையும் வெற்றிமாறனைப் போல் யாரும் பேசியதில்லை என்று மற்றொரு தரப்பினர் கூறி வருகிறார்கள் 


விடுதலை 2 ஓடிடி ரிலீஸ் 


இந்நிலையில் நேற்று சென்னையில் விடுதலை 2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. விடுதலை 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. திரையரங்கத்தில் வெளியிடுவதற்காக இப்படத்தில் இருந்து 1 மணி நேர காட்சிகள் படத்தில் இருந்து வெட்டப்பட்டன இந்த காட்சிகள் இணைக்கப்பட்டு விடுதலை 2 ஓடிடியில் வெளியாகும் என இயக்குநர் வெற்றிமாறன் முன்னதாக தெரிவித்திருந்தார். விடுதலை முதல் பாகம் வெளியான ஜீ ஃபைவ் தளத்திலேயே விடுதலை 2 ஆம் பாகமும் வெளியாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன . ஓடிடி தளத்தில் நீக்கப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து பார்த்தப்பின் விடுதலை 2 படத்திற்கு மேலும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைக்கும் என வெற்றிமாறன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்