Viduthalai 2 : தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விடுதலை'. நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன், உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. எல்ரெட் குமார் தயாரிப்பில் இளையராஜா இசையமைப்பில் உருவான இப்படம் காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சினை மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தது. நடிகர் சூரி இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் இரு மொழிகளிலுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. விடுதலை படத்தின் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இது ரசிகர்கள் மத்தியில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
'விடுதலை 2' படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் மீதம் இருக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'விடுதலை 2' படத்தின் அப்டேட் குறித்த தகவல் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நாளை ஜூலை 17 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு 'விடுதலை 2 ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சர்ப்ரைஸ் தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக 'மகாராஜா' திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் பட்டையை கிளப்பியது. விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் முனிஷ் காந்த், அபிராமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.