அசுரன் படத்தில் இடம்பெற்ற கல்வி தொடர்பான வசனத்தை, விஜய் பேசியதை  இயக்குனர் வெற்றிமாறன் வரவேற்றுள்ளார்.


போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி:


சென்னையில் காவல்துறை சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போதைப்பொருட்களுக்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டனர்.


வெற்றிமாறன் செய்தியாளர் சந்திப்பு:


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறனிடம், மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில்  அசுரன் பட வசனத்தை விஜய் பேசியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிமாறன் “சினிமாவில் நாம் பேசுகிற வசனம், சமூகத்தில் மிகப் பிரபலமான ஒருவர் மூலமாக சென்றைடையும்போது அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத்தான்  நான் பார்க்கிறேன்” என்றார்.


”அண்ணாவையும் படிங்க”


அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் குறித்து படிக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நமது வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா. இதற்காக அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் ஆகியோருடன் சேர்ந்து அண்ணாவையும் படிக்க வேண்டும்” என கூறினார். தொடர்ந்து கேள்விகளை எழுப்ப முயன்றபோது, எப்பா எப்பா போதும்ப்பா..போதும்ப்பா என சிரித்தபடியே வெற்றிமாறன் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.


விஜய் பேசியது என்ன?


தமிழ்நாடு முழுவதும் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக, முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.  சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்படத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய் கலந்துகொண்டு இந்த விருதுகளை வழங்கினார்.


”பிரைட் ஸ்டூடண்ட் இல்லை”


நிகழ்ச்சியில் பேசிய விஜய் “நான் வந்து உங்கள மாதிரி பெரிய பிரைட் ஸ்டூடண்ட்லாம் கிடையாது. ரொம்ப ரொம்ப ஏவ்ரேஜ் ஒரு ஜஸ்ட் பாஸ் ஸ்டூடண்ட் மட்டும் தான். நான் வந்து நடிகர் ஆகலன்னா, அது ஆகியிருப்ப, இது ஆகியிருப்ப, ஒரு டாக்டர் ஆகியிருப்ப அப்டிலா சொல்லி உங்கள போர் அடிக்க விரும்பல. எனக்கு எனோட கனவுலா சினிமா, நடிப்பு தான். அதை மட்டும் தான் என்னோட பயணம் போயிட்டு இருந்தது. ஒருவேளை.... சரி அதவிடுங்க அதபத்தி இப்ப எதுக்கு. (அரசியல்வாதி ஆகியிருந்தால் என்பது போன்று பேச வந்தார் என சந்தேகிக்கப்படுகிறது. )


அசுரன் வசனம் பேசிய விஜய்:


இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய மிக முக்கிய காரணம் அண்மையில் ஒரு படம் பார்த்தேன்.  அதில் ஒரு வசனம் நான் கேட்டேன், காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபா இருந்த பிடிங்குக்குவாங்க, ஆனா படிப்ப மட்டும் உண்ட இருந்த எடுத்துக்குவே முடியாதுன்னு. அது என்ன ரொம்ப பாதிச்ச ஒரு லைனா இருந்துச்சு. நூற்றுக்கு நூறு உண்மை மட்டும் இல்ல, இதுதான் எதார்த்தமும் கூட. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்விக்கு, எனது தரப்பில் இருந்து ஏதாவது செய்ய வேண்டும் என எனது மனிதில் நீண்டகாலமாக ஓடிக்கொண்டு இருந்தது. அதுக்கான நேரம் தான் இது என நான் நினைக்கிறேன்” என கூறியிருந்தார்.