தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். ‘பொல்லாதவன் ’, ‘ ஆடுகளம்’ ‘விசாரணை’ உள்ளிட்ட தனித்துவமான பல படங்களை எடுத்திருக்கும் இவர், தற்போது விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘ விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். படங்களை இயக்கி வரும் அதே நேரம், பிறர் படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதுவது, படங்களை தயாரிப்பது, பிறர் தயாரிக்கும் படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்து ஆலோசனைகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில், இணை தயாரிப்பாளராக பணியாற்றுவதோடு, அந்தப்படத்திற்கு திரைக்கதை எழுதுவதற்கும் கமிட் ஆனார் வெற்றிமாறன். ‘அதிகாரம்’ என தலைப்பு வைக்கப்பட்ட இந்தப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரான துரை செந்தில் குமார் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்திற்கான எழுத்துப்பணிகள் நடந்து வரும் நிலையில், அதிகாரம் படம் ட்ராப் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இதனால் திரைவட்டாரத்தில் சலசலப்பு எழுந்த நிலையில், இது குறித்த விளக்கமொன்றை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில் “ அதிகாரம் படம் ட்ராப் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த செய்தி எங்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. படத்திற்கான எழுத்துப்பணிகள் மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கான திட்டப்பணிகள் உள்ளிட்டவை சுமூகமாக நடந்து கொண்டிருக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளது.