Just In





வாயடைத்த வெற்றிமாறன்...ராட்டர்டாம் விழாவில் நெட்பாக் விருது வென்ற பேட் கெர்ல்
வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கிய பேட் கேர்ல் திரைப்படம் சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில் நெட்பாக் விருது வென்றுள்ளது

பேட் கேர்ல்
வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யம் இணைந்து தயாரித்துள்ள படம் பேட் கேர்ல். வெற்றிமாறனின் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த மாதம் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலிப்பதையே தனது வாழ்க்கையின் நோக்கமாக கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்திய படமாக உருவாகியிருக்கும் படம் பேட் கேர்ல். இப்படத்தின் டிரைலரில் நாயகி மது அருந்துவதும் உடலுறவு கொள்வதுமான காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் கலாச்சார காவலர்கள் இந்த டிரைலரை கடுமையாக விமர்சித்தார்கள்.
மேலும் படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது இயக்குநர் வர்ஷா பரத் பேசியதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. " பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை இந்த படம் போதிக்கவில்லை. பெண்கள் புனிதர்களாக இருப்பதை விட மனிதர்களாக இருப்பது நல்லது " என அவர் தெரிவித்திருந்தார்.
திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தொடங்கி பலர் இந்த டிரைலரில் பிராமண சமூகத்தை பெண் ஒருவரை தவறாக சித்தரிப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்கள். மேலும் டிரைலரை பகிர்ந்த விஜய் சேதுபதியின் மகளை வைத்தும் வெற்றிமாறனின் தங்கையை வைத்தும் சைபர் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.
நெட்பாக் விருது வென்ற பேட் கேர்ல்
நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில் பேட் கேர்ல் திரைப்படம் கடந்த சில நாட்கள் முன்பு திரையிடப்பட்டது. சர்வதேச ரசிகர்களிடம் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் ராட்டர்டாம் திரைப்பட விழாவின் உயரிய விருதுகளில் ஒன்றான நெட்பாக் விருது இப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பேட் கேர்ல் படத்தின் டிரைலரைப் பார்த்து விமர்சித்த பலரை இந்த விருது வாயடைக்க வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் .