ஜூனியர் என்.டி.ஆருடன் இணையப் போகிறார் என கடந்த சில மாதங்களாக வதந்தி பரவிய நிலையில் அதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் “விடுதலை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் கதையின் நாயகனாக சூரியும், வாத்தியாராக போராளி கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர்.
மேலும் பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோரும் படத்தில் இடம் பெற்றிருந்தனர். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்த விடுதலை படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. 2 ஆம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே விடுதலை படத்தின் தெலுங்கு டப்பிங் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை பவானி ஸ்ரீ ஆகியோர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றுள்ளனர். அந்த வகையில் அல்லு அர்ஜுனின் தந்தையான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தனது தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸின் கீழ் இப்படத்தை தெலுங்கில் வெளியிடுகிறார். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது.
அப்போது இயக்குநர் வெற்றிமாறனிடம் தெலுங்கு நடிகர்களுடன் பணிபுரிவது தொடர்பான பரவும் தகவல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “ஆடுகளம் படத்தின் ரிலீசுக்குப் பிறகு அல்லு அர்ஜுனை சந்தித்தேன், அவரும் சென்னையில் என்னை சந்தித்தார். அப்போது அல்லு அர்ஜூன் என்னிடம், நான் தமிழில் நடிக்க விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் எனக்கு கதை சொல்லுங்கள் என சொன்னார் அந்த நேரத்தில் நான் வட சென்னை படத்தின் கதையை சொன்னேன். அதில் ஒரு சக்தி வாய்ந்த கேரக்டர் இருந்தது. அதை நான் இப்போது மீண்டும் மாற்றி எழுதியுள்ளேன். படத்தின் தற்போதைய வடிவம் அந்த நேரத்தில் என் மனதில் இருந்தது போல இல்லை. இன்னொரு கேரக்டர் இருக்கு. அதை சொன்னேன். அது நடக்கவில்லை.
அதேபோல் “ஆடுகளம் வெளியீட்டிற்குப் பிறகு மகேஷ் பாபுவையும், அசுரன் படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆரையும் சந்தித்து பேசினேன். ஆனால் இவர்களை இயக்க சில காலம் தேவைப்படும் என்பதால் இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது” என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும், முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாம் பாகத்தில் தனுஷும் நடிக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.