தமிழ் சினிமாவில் நக்கல் நையாண்டி என்பதற்கு பெயர் போன காமெடி நடிகர் என்றால் அது நம் கவுண்டமணி தான். 1964ஆம் ஆண்டு முதல் இவர் பல வேடங்களில் தமிழ் திரையுலகலில் நடித்து வருகிறார். எனினும் 1989ஆம் ஆண்டு வெளிவந்த கரகாட்டக்காரன் படத்தில் வந்த வாழைப்பழ காமெடி காலம் கடந்த ஒன்றாக அமைந்தது. தனது திரைப்படங்களில் எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடித்து காமெடி செய்த ஒரே நடிகர் இவர் தான். குறிப்பாக ஆல் இன் ஆல் அழகுராஜா, பழைய பாத்திரங்களுக்கு ஈயம் பூசம் கதாபாத்திரம், குதிரை வண்டிக்காரர், முடி திருத்தும் தொழிலாளி என்று எளிய மக்களின் வேலைகளை திரைபடங்களில் அதிகம் கொண்டு வந்தவர் கவுண்டமணி. 


இன்று அவர் தனது 83ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் 90 கிட்ஸ் ரசித்த சில கவுண்டமணி காமெடிகள் என்னென்ன?


மன்னன் (1992):


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்திருப்பார். இதில் கவுண்டமணி மற்றும் ரஜினிகாந்த் சேர்ந்து சின்னதம்பி படத்திற்கு முதல் நபராக தியேட்டரில் டிக்கெட் எடுக்க செல்லும் காட்சி எப்போதும் சிறப்பான ஒன்றாக இருக்கும். அதில் நாயகி விஜயசாந்தி பரிசுப் பொருளை தரும் போது இவர்களின் நடிப்பு அருமையாக இருக்கும். அப்போதும் கவுண்டமணி தன்னுடைய நக்கலான பானியை விடமாட்டார். அப்போது அவர், "நாங்களாவது உங்க கிட்ட சொல்லிட்டு வந்தோம் நீங்க எங்க கிட்ட சொல்லமா வந்துட்டீங்க"எனக் கூறுவார். 


 



 


சிங்காரவேலன்(1992):


கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்காரவேலன். இந்தத் திரைப்படத்தில் பாடகர் மனோ, வடிவேலு, கவுண்டமணி என அனைவரும் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் தனது நண்பர் மனோவின் வீட்டை தேடி வரும் கமல் கவுண்டமணியிடம் வந்து மனோ வீடு இதுதான என்று கேட்பார். அப்போது அதற்கு நக்கலாக 'என் இதை பார்த்த மனோவின் தோட்டம் மாதிரி தெரியுதா' என கேட்பார். இந்தப் படத்தில் ட்ரம்ஸ் மணி கதாபாத்திரத்தில் நடித்த கவுண்டமணி படம் முழுவதும் நம்மை கவர்ந்து இருப்பார். 


 



ஜென்டில்மேன்(1993):


இயக்குநர் சங்கரின் சிறப்பான திரைப்படங்களில் ஒன்று ஜென்டில்மேன். இந்தப் படத்தில் கவுண்டமணி, செந்தில், அர்ஜுன் கூட்டணி நடித்திருக்கும். இந்தப் படத்தில் கவுண்டமணி கூறும் ,"ப்யூடிஃபுல் கேம் இந்த கேம்க்கு நேம் என்னங்க" என்ற வசனம் நம்மை சிரிப்பின் உச்சத்திற்கு அழைத்து செல்லும். கவுண்டமணி செந்தில் கூட்டணி வழக்கம் போல் இந்தப் படத்திலும் கலக்கி இருக்கும். 


 



நாட்டாமை(1994):


சரத்குமார், குஷ்பு நடிப்பில் வெளியான திரைப்படம் நாட்டாமை. இந்தப் படத்தில் கவுண்டமணி நாட்டாமையின் பங்காளியாக நடித்திருப்பார். அதில், செந்தில் இவருக்கு தந்தையாக இருப்பார். அப்போது அவரும் இவரும் செய்யும் காமெடி பார்போரை வயிறு குழுங்க சிரிக்கை வைக்கும். 'மைசன் உங்க அம்மா யாருனு தெரியுமா பொயிரும்' என செந்தில் ஒவ்வொரு முறை கூறும் போது கவுண்டமணியின் நடிப்பு பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தில் அம்மா பெண் வேடத்தில் வரும் கவுண்டமணி 'இன் கிஸ்தா மன்கிஸ்தா பாயாசா' என்று கூறும் வசனத்தை யாரும் மறக்க மாட்டார்கள். 


 



மேட்டுக்குடி(1996):


கார்த்திக்,நக்மா, ஜெமினி கணேசன் உள்ளிட்டவர்கள் நடித்த படம் மேட்டுக்குடி. இந்தப் படத்தில் கவுண்டமணி காலிங்கராயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் அவர் தனது அக்கா மகளான நக்மாவிற்கு எழுதும் காதல் கடிதம் காலம் கடந்து நிற்கும் காதல் கடிதங்களில் ஒன்று. அதை அவர் படத்தில் கூறும் போது, "அக்கா மகளே இந்து.." என்று காட்சிகள்  இருக்கும். மேலும் அப்படத்தில் கார்த்திக் கவுண்டமணிக்கு ரொமான்டிக் லுக் விட சொல்லி தரும் கட்சிகள் அருமையாக இருக்கும்.


 



காதலர் தினம்(1999):


1999ஆம் ஆண்டு வெளிவந்த காதலர் தினம் தமிழ் சினிமாவில் காதலை பறைசாற்றும் ஒரு முக்கியமான திரைப்படம். இந்தப் படத்தில் பேராசிரியர் கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்திருப்பார். இவர் இப்படத்தில் கணினியில் சின்னி ஜெயந்த் உடன் அன்பே டயானா என்று காதல் செய்யும் காட்சிகள் காமெடி மழை தரும் வகையில் அமைந்திருக்கும். 


 



கரகாட்டக்காரன் (1989):


அன்றும் இன்றும் என்றும் அழியாக கவுண்டமணி காமெடி என்றால் அது வாழைப்பழ காமெடி தான். இந்தப் படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி நம்மை வயிறு வழிக்கும் வகையில் சிரிக்க வைத்திருக்கும். குறிப்பாக 'இந்த காரை நம் வச்சிருக்கோம். இப்போ காரை வச்சு இருந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்க' என்று செந்தில் கேட்கும் காட்சி நம்மை சிரிப்பின் உச்சக்கட்டத்திற்கு அழைத்து செல்லும். 


 



இவை தவிர வைதேகி காத்திருந்தால் திரைப்படத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா கதாபாத்திரம், சூரியன் படத்தில் வேலையே செய்யாத டெலிபோனில் பேசிவிட்டு, "அரசியல இதுலாம் சாதாரணமப்பா"  என்று அவரும் கூறும் வசனம் என இவரது காமெடிகளை அடிக்கு கொண்டே போகலாம். எத்தனை வயதை கடந்தாலும் கவுண்டரின் காமெடிகள் இன்றும் இளமையாகவே நிழலாடுகின்றன.