பழம்பெரும் ஒடியா திரைப்பட நடிகை ஜரனா தாஸ் மரண செய்தி அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1945 ஆம் ஆண்டு ஒடிசாவில் பிறந்த ஜரனா தாஸ் 1960 ஆம் ஆண்டுகளில் தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்ரீ ஜெகநாத், நாரி, ஆதினமேகா, ஹிசாப்னிகாஸ், புஜஃபுலா, அமதபாதா, அபினேத்ரி, மலஜன்ஹா மற்றும் ஹீரா நெல்லா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டைப் பெற்ற அவர் கட்டாக்கில் உள்ள அகில இந்திய வானொலியில் முதலில் குழந்தை தொகுப்பாளராகவும், பின்னாளில் அறிவிப்பாளராகவும் பணியாற்றினார்.
அதன்பின்னர் கட்டாக்கில் உள்ள தூர்தர்ஷனின் உதவி நிலைய இயக்குனராகவும் பணியாற்றிய ஜரனா தாஸ் முன்னாள் ஒடிசா முதல்வர் ஹரேக்ருஷ்னா மஹ்தாப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தை இயக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும் ஒடியா திரைப்படத் துறையில் தனது வாழ்நாள் பங்களிப்பிற்காக அம்மாநில அரசின் மதிப்புமிக்க ஜெய்தேவ் புரஸ்கார் விருதை ஜரனா தாஸ் வென்றார்.
77 வயதான அவர் முதுமை காரணமாக ஏற்படும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுச் செய்தி இந்திய திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். அதேசமயம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பழம்பெரும் ஒடியா நடிகை ஜரனா தாஸ் மறைவு செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். ஒடியா திரைப்படத் துறையில் அவரது சிறந்த பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என தெரிவித்திருந்தார்.
மேலும் ஜரனா தாஸின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஜரனா தாஸ் மேடையில் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பதை மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள் என தெரிவித்திருந்தார்.