ஒடியா மாநிலத்தில் பிரபல நடிகராக வலம் வந்த ராய்மோகன் பரிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஒடியா மாநிலத்தில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ராய்மோகன் பரிதா. இவர் புவனேஷ்வர் பிராச்சி விஹாரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து மஞ்சேஸ்வர் காவல் அதிகாரிகள் கூறும் போது, “ வீட்டில் உள்ள கூரைப்பகுதியில் தூக்கிட்டு ராய்மோகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்று கூறினர்.
மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்தான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. 58 வயதான ராய்மோகன் 100 க்கும் மேற்பட்ட ஒடியா மற்றும் பெங்காலி படங்களிலும், 30க்கும் மேற்பட்ட வித்தியாசமான தியேட்டர் நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறார். கியோஞ்சர் மாவட்டத்தில் பிறந்த ராய்மோகன் கரஞ்சியா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். தொடர்ந்து உட்டல் சங்கீதா மகாவித்யாலாயாவில் நாடகம் பயின்றார்.
இந்த இறப்பு பற்றி பிரபல நடிகர் சித்தாந்த் மஹாபத்ரா கூறும் போது, “ எப்போதுமே சிரித்துக்கொண்டே இருக்கும் ராய்மோகன் இந்த முடிவை எடுத்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது வாழ்கையில் அவர் பல மேடு பள்ளங்களை சந்தித்து இருக்கிறார். ஆனால் அவர் இப்படி முடிவை எடுப்பார் என்பதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் அவரது தொழிலில் வெற்றிகரமாகவே இருந்தார். அவரது இறப்புக்கு நிச்சயம் பணம் காரணமாக இருக்க முடியாது. இது குறித்த விரிவான விசாரணை தேவை” என்று பேசியுள்ளார்.