தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான ரா.சங்கரன் உடல்நலக்குறைவால் தனது 92வது வயதில் காலமானார். இதனை இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
1974 ஆம் ஆண்டு சிவகுமார் நடிப்பில் வெளியான “ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சங்கரன். மேலும் தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, ஒருவனுக்கு ஒருத்தி, பெருமைக்குரியவள், தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை, குமரி பெண்ணின் உள்ளத்திலே உள்ளிட்ட 7 படங்களை இயக்கியுள்ள அவர் நடிகராகவும் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகராக ஆடிப்பெருக்கு படத்தின் தான் அறிமுகமானார். புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, மௌன ராகம், உனக்காக வாழ்கிறேன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் என் பக்கம், நியாயத்தராசு, எதிர்காற்று, அமரன், சின்ன கவுண்டர், அமராவதி, ரோஜாவை கிள்ளாதே, ஜமீன் கோட்டை, அரண்மனை காவலன், சின்ன மேடம், சதிலீலாவதி, பகவத் சிங், அழகர் சாமி, காதல் கோட்டை என பல படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.
குறிப்பாக மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தில் நடிகை ரேவதியின் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். சந்திரமௌலி என அவரை அப்படத்தின் நடிகர் கார்த்திக் அழைக்கும் காட்சி திரைப்பட ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் சங்கரனை பிரபலமாக்கியது. இவர் இயக்குநர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
இந்நிலையில் 92 வயதான இயக்குனர் திரு.ரா.சங்கரன் உடல் குறைவால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, “எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என இயக்குநர் பாரதிராஜா பதிவிட்டுள்ளார். ரா. சங்கரன் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.