ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை விரைவில் பார்ப்பேன் என ஹாலிவுட் பிரபலம் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கொண்டாடப்படும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். தீபாவளி வெளியீடாக வெளியான இப்படத்தில் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே.சூரியா , நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன், சத்யன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ்  நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்த நிலையி திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்ச்டோன் பெஞ்சு புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. 


இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் 2ஆம் பாகமாகும். இந்த படத்தில் அல்லியன் சீசர் என்னும் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார். மதுரையை அடக்கி ஆளும் ரவுடியாக அவருக்கு சினிமாவில் வரும் ஹாலிவுட் பிரபலமான க்ளின்ட் ஈஸ்ட்வுட் தான் ரோல் மாடல். அவர் செய்யும் சம்பவங்களும் ஈஸ்ட்வுட் படங்களை பார்த்தே அதில் வருவது போலவே இருக்கும். மேலும் அதில் காட்டப்படும் பிளாஸ்பேக் காட்சிகளில் கூட ஈஸ்ட்வுட் தான் ராகவா லாரன்ஸூக்கு அல்லியன் சீசர் என்ற பெயரை வைத்ததாகவும் காட்டப்பட்டிருக்கும். 






இப்படியான நிலையில் தமிழ் படத்தில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பற்றி காட்டப்பட்டிருந்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவரை பற்றி தெரியாதவர்கள் கூட யார் அவர் என இணையத்தில் தேடினர். 93 வயதான க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர். தற்போது கூட ஜூரி 2 என்ற படத்தை இயக்கி வருகிறார். சினிமாவில் நாம் பார்க்கும் கௌபாய் வேடங்களுக்கு விதை போட்டவர்களில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும் ஒருவர். 


இதனிடையே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படம் ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்து விட்டது. மேலும் இப்படத்தின் 3வது பாகம் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஜிகர்தண்டா படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி வெளியானது. 


இந்த நிலையில் இணையவாசி ஒருவர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் எக்ஸ் வலைத்தள கணக்கை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “இந்தியர்களாகிய நாங்கள் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். அது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது. இந்த படம் முழுக்க நாங்கள் உங்களுக்கு சிறந்த மரியாதை அளித்துள்ளோம். சில அனிமேஷன் காட்சிகளை நீங்கள் இளம் வயதில் இருப்பது போல நாங்கள் உருவாக்கியுள்ளோம். நேரம் கிடைத்தவுடன் அதைப் பாருங்கள்” என தெரிவித்திருந்தார். 


இதற்கு பதில் கொடுத்துள்ள க்ளிண்ட் ஈஸ்ட்வுட், ”வணக்கம். நான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பற்றி அறிந்திருக்கிறேன். என்னுடைய ஜூரி 2 படம் முடித்தவுடன் அதை பார்க்கிறேன்” என தெரிவித்திருந்தார். இதனை குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை கார்த்திக் சுப்பராஜ் வெளிப்படுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லெஜண்ட் கிளின்ட் ஈஸ்ட்வுட் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் பற்றி அறிந்திருக்கிறார் என்பது ஒரு கனவு போல உள்ளது.  விரைவில் அப்படத்தை பார்க்கப்போகிறேன் என தெரிவித்துள்ளார்.  


இந்தியாவில் உள்ள அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் சார்பாக  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை அவருக்கு நான் இதயப்பூர்வமாக அர்ப்பணித்துள்ளேன்.  படத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். இந்த தருணத்தில் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என தெரிவித்துள்ளார்.