Kartika Nair Marriage: 80களில் எவர்கிரீன் நடிகையாக வலம்வந்த ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நடைபெற்ற புகைப்படத்தை நடிகை ராதிகா பகிர்ந்துள்ளார்.
அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராதா 80களில் கனவு நாயகியாக வலம் வந்தார். ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், சிவாஜி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ராதா எவர்கிரீன் நாயகியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கொடிகட்டிப் பறந்த ராதா, மும்பையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார். ராதாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.
அதில், ராதாவின் மூத்த மகளான கார்த்திகா 2009ம் ஆண்டு தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து திரையில் அறிமுகமானர். பின்னர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘கோ’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். தொடர்ந்து பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த அன்னக்கொடி படத்திலும் கார்த்திகா நடித்து அசத்தினார். ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் கார்த்திகாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. எனினும், அதிக பட வாய்ப்புகள் இல்லாததால் திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிய கார்த்திகா பிசினஸில் ஆர்வம் காட்டி வந்தார்.
இந்த நிலையில் அண்மையில் கார்த்திகாவுக்கு ரோஹித் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த சூழலில் கார்த்திகாவுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த புகைப்படத்தை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் எளிமையாக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில், ராதிகா, சுஹாசினி, ரேவதி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல 80களின் முன்னணி நடிகர், நடிகையர் பங்கேற்றுள்ளனர். ராதாவின் மகளின் திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர்.