நடிகை த்ரிஷா பற்றியும் படுக்கையறைக்காட்சி பற்றியும் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிலையில், இதற்கு த்ரிஷா நேற்று கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தார்.


நடிகை த்ரிஷாவுடன் மன்சூர் அலிகான் லியோ படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், த்ரிஷாவுடன் தனக்கு காட்சிகள் இல்லை என்றும், பாலியல் வன்முறை செய்யும்படி காட்சி இருக்கும் என தான் நினைத்ததாகவும் முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் ஆபாசமான முறையில் பேசி இருந்தார். மேலும் நடிகைகள், குஷ்பு, ரோஜாவுடன் படங்களில் இருந்தது போல், த்ரிஷாவையும் பாலியல் வன்முறை செய்யும் காட்சி இருக்கும் என தான் நினைத்ததாகவும் முகம் சுளிக்கவைக்கும் வகையில் பேசி இருந்தார்.


இந்த வீடியோ இணையத்தில் ஏற்கெனவே எதிர்ப்புகளைப் பெற்ற நிலையில், நடிகை த்ரிஷா நேற்று கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார். மன்சூர் அலிகான் போன்ற நபர் மனித சமுதாயத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தான் அவருடன் தன் திரைப்பயணம் முழுவதும் இணைந்து நடிக்கவே போவதில்லை என்றும் காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில், மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை குஷ்பு தற்போது எதிர்வினையாற்றியுள்ளார். “ஒரு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நான் ஏற்கெனவே மன்சூர் அலி கான் விஷயத்தைப் பற்றி  எனது மூத்த உறுப்பினர்களிடம் எடுத்துச் சொல்லிவிட்டேன். நிச்சயம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.


இப்படிப்பட்ட அசுத்தமான மனம் கொண்டவரை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது. த்ரிஷாவுடன் நான் உடன் நிற்கிறேன். நான் உள்பட என் சக நடிகைகள் பற்றி இந்த மனிதன் மிகவும் ஆபாசமாக தரக்குறைவான முறையில் பேசுகிறார். பெண்களைப் பாதுகாக்க நாம் அயராமல் இப்படி போராடும்போது, ​​​​இத்தகைய ஆண்கள் நம் சமூகத்தில் ஒரு ரோபோ போல் செயல்படுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.


 






மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.