ஒட்டுமொத்த குடும்பமே தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பிரபலங்களாக இருந்து வருகிறார்கள் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி பழம்பெரும் நடிகர் விஜயகுமார் குடும்பம் தான். அவரின் குடும்பத்திற்கும் மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே இருக்கும் பிரச்சினை இந்த ஊர் அறிந்ததே. இந்நிலையில் வனிதா விஜயகுமார் மகன் ஸ்ரீஹரி விரைவில் ஹீரோவாக போகிறார் என்ற தகவல் இணையத்தில்  வைரலாகி வரும் நிலையில் விஜயகுமார் மற்றொரு பேரன் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


 



ஹீரோவாகும் ஸ்ரீஹரி :


வனிதாவின் முதல் கணவர் ஆகாஷுக்கு பிறந்த மகன் ஸ்ரீஹரி தந்தையுடனும், மகள் ஜோவிகா வனிதாவிடமும் வளர்ந்து வருகிறார்கள். ஜோவிகா ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். தற்போது வனிதா, மகள் ஜோவிகாவை எப்படியாவது ஒரு பெரிய நடிகையாக்கி விட வேண்டும் என் முழு வீச்சியில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஜோவிகா ஹீரோயின் ஆவதற்கு முன்னரே வனிதாவின் மகன் ஸ்ரீஹரி ஹீரோவாக உள்ளார் என்ற தகவல் வெளியானது. 


 


ப்ரீத்தா மகன் ஸ்ரீராம் : 


மைனா, கும்கி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநரான பிரபு சாலமன் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் ஸ்ரீஹரி ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் இயக்குநர் ஹரியின் மகன் ஸ்ரீராம் ஹரி 'ஹும்' என்ற பைலட் ஃபிலிமை இயக்கி அதை யூடியூபில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் நடிகையும் விஜயகுமாரின் இளைய மகளுமான ஸ்ரீதேவி விஜயகுமார் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



ஹரியின் ரத்னம் :



சிங்கம், சாமி, தாமிரபரணி, வேல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் விஷாலை வைத்து 'ரத்னம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ளது. அவரின் மகன் ஸ்ரீராம் ஹரி தற்போது விஸ்காம் பைனல் இயர் படித்து வருகிறார். அவரின் காலேஜ் ப்ராஜெக்ட்டுக்காக இந்த படத்தை இயக்கி அதை யூடியூபில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீராம் ஹரி. 


 


விஜயகுமார் பேரன்கள் :


மிக பெரிய திரை குடும்பத்தின் வாரிசுகளான ஸ்ரீஹரி மற்றும் ஸ்ரீராம் ஹரி இருவரும் அடுத்த தலைமுறையில் இருந்து திரைத்துறைக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். ஏற்கனவே விஜயகுமார் மகன் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் நடித்த 'ஓ மை டாக்' திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.