எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி தனுஷூக்கும் தனக்குமான அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானை கூட்டம் படம் மூலம் நடிகராக களம் கண்டார். தொடர்ந்து சேதுபதி மற்றும் கிடாரி படங்களில் இவர் ஏற்று நடித்த வில்லன் கேரக்டர் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுக் கொடுத்தது. கொம்பன், ரஜினிமுருகன், அப்பா, அண்ணாத்த என பல படங்களில் வித்தியாசமான கேரக்டரில் அசத்திய வேல ராமமூர்த்தி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். 

இதனிடையே இவர் நேர்காணல் ஒன்றில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் பற்றி பேசியுள்ளார். அதாவது, “இயக்குநர் கௌதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. அந்த படத்தில் பணியாற்றியவர்கள் எல்லாரும் இளம் வயதினர் தான். அந்த படத்தில் நான் மாடர்ன் அப்பாவாக நடித்திருப்பேன். பொள்ளாச்சியில் அப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம் தனுஷ் யாரிடமும் பேசவே மாட்டார். செட்டுக்குள் வந்தவுடன் கௌதமிடம் மட்டும் வணக்கம் வைத்து விட்டு செல்வார்.

அதேசமயம் கௌதம் எல்லாரிடமும் என்னை மிகச்சிறந்த எழுத்தாளர் என அறிமுகம் செய்வார். முதல் ஷெட்யூல் முடிந்ததும் மிகப்பெரிய இடைவெளி விழுந்து விட்டது. நான் அதற்குள் சசிகுமார் நடித்த கிடாரி படத்தில் வில்லனாக நடித்திருந்தேன். கொம்பையா பாண்டியன் என்ற அந்த கேரக்டருக்கு சிறந்த வில்லன் விருது கிடைத்தது. நான் போய் நடித்து படம் ரிலீசாகும் அளவுக்கு இடைவெளி எனை நோக்கி பாயும் தோட்டாவுக்கு விழுந்தது

இதற்கிடையில் இந்த படத்தின் 2வது ஷெட்யூல் தொடங்கியது. முதல் ஷெட்யூலில் என்னிடம் பேசாத தனுஷ், இம்முறை நேராக வந்து, “ஹாய் அங்கிள்..கிடாரி பார்த்தேன். இப்படி ஒரு வில்லன் தமிழ் படத்துக்கு கிடைச்சிருக்கீங்க” என சொன்னான். அப்படி ஒரு பெயரை கிடாரி படம் பெற்றுக் கொடுத்தது” என வேல ராமமூர்த்தி தெரிவித்திருந்தார்.

எனை நோக்கி பாயும் தோட்டா

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், சுனைனா என பலரும் நடித்த படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்திருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு நவம்பரில் தான் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.