தமிழ் சினிமா எத்தனையோ குணச்சித்திர நடிகர்களை கடந்து வந்து இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே காலம் காலமாக நெஞ்சில் நீங்காத ஒரு இடத்தை பிடிப்பார்கள். அப்படிப்பட்ட ஒப்பில்லா கலைஞர்களில் ஒருவர் தான் பழம்பெரும் நடிகர், நாடக நடிகர் வி.எஸ். ராகவன். அவரின் தனித்துமான சிறப்பு என இன்றும் கருதப்படுவது அவரின் குரல் தான். அதை இன்றளவும் பலரும் மிமிக்ரி செய்ய முயற்சி செய்தாலும் வி.எஸ். ராகவன் போல அச்சு அசலாக பேசக்கூடிய ஒருவர் நிச்சயம் எந்தக் காலத்திலும் வரவே முடியாது. அப்படி தனித்துவம் வாய்ந்த வி.எஸ். ராகவனின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. 


 



செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் என்ற கிராமத்தில் 1925ம் ஆண்டு பிறந்த வி.எஸ். ராகவனுக்கு சிறு வயது முதலே கலைத்துறை மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் பல நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார்.  சென்னை மயிலாப்பூருக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்த பிறகு 'மாலதி' என்ற இதழில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். அதன் மூலம் பத்திரிகை துறையில் அவருக்கு  இருந்த அதிகப்படியான ஆர்வம் வெளிப்பட்டது. 


பத்திரிகை துறையில் வேலைபார்த்து வந்த அதே சமயத்தில் நாடகங்களிலும் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி இந்தி நடங்களிலும் நடித்து வந்தார். தமிழிலும், இந்தியிலும் அவரின் வசன உச்சரிப்பிற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். மிகவும் பிரபலமான நாடகக் கலைஞராக இருந்த வி.எஸ். ராகவனுக்கு, கே. பாலச்சந்திரன் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


அதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து அதை வெகு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் வி.எஸ்.ராகவன். 1957ம் ஆண்டு 'சமய சஞ்சீவி' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக  அறிமுகமானார். ஆனால் அப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு பிறகு படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்ததால் வேறு எந்த பக்கமும் செல்லவில்லை.    


 




எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - கார்த்தி என மூன்று தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள பெருமைக்குரியவர் வி.எஸ். ராகவன். 1954ம் ஆண்டு வெளியான 'வைரமாலை' திரைப்படம் மூலம் தான் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றறவருக்கு தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. உரிமைக் குரல், சங்கே முழங்கு, வசந்த மாளிகை, சுமைதாங்கி, காதலிக்க நேரமில்லை, நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். 


இன்றைய இளைஞர்களுக்கு வி.எஸ். ராகவன் பற்றி அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி, சந்தானம், மனோபாலா உள்ளிட்டோரின் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கலகலப்பு' படத்தில் சமையல்கார தாத்தாவாக நடித்தவர் தான் வி.எஸ். ராகவன். அதைத் தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகு ராஜா, சகுனி, தமிழ் படம், இன்று நேற்று நாளை, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல இன்றைய காலத்துக்கு வெற்றிப்படங்களிலும் நடித்துள்ளார். 


சுமார் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வி.எஸ். ராகவன், தன்னுடைய 30 - 35 வயதிலேயே பல ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் தந்தையாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். நடிகர் நாகேஷ் - வி.எஸ். ராகவன் இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. சினிமா உள்ள காலம் வரை வி.எஸ். ராகவன் நினைவுகளும் நிலைத்து இருக்கும்.